தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது – பொது மக்களை எச்சரிக்கும் பணிப்பாளர்
தற்போதைய தாழமுக்கம் காரணமாக நாடெங்கிலும் பெய்து வரும் அடைமழை காரணமாக தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளமையினால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தர்மராஜா வினோதன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தற்போது பெய்து வரும் அடைமழை காரணமாக டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரித்து நோய்கள் உண்டாகும் வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே மன்னாரில் தோட்டவெளி, மன்னார் நகரம், பேசாலை, போன்ற இடங்களில் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் கள்.
எனவே வீடுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் தண்ணீர் தேங்கி நிற்காமல் பாதுகாக்க வேண்டும். மழை காலங்களில் கொதித்து ஆறிய நீரை பருகுவதன் மூலம் நெருப்புக் காய்ச்சல் ,சளி, வயிற்றோட்டம் போன்ற பல தொற்று நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
மேலும் நீர் தேங்கி நிற்கும் இடங்களுக்கு சிறுவர்களை குளியலுக்கு அல்லது விளையாடவோ தண்ணீர் எடுத்து வருவதற்கோ அனுப்புவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
முக்கியமாக காலநிலை அவதானிப்பு நிலையம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையங்களின் எச்சரிக்கைகளும் மதிப்பளித்து வீடுகளில் பாதுகாப்பாக இருக்குமாறு மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தர்மராஜா வினோதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.