இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு இலங்கை அரசு அவசர எச்சரிக்கை
மத்திய கிழக்கில் சில பகுதிகளில் நிலவி வரும் அமைதியின்மையால் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படலாமெனும் சந்தேகம் மற்றும் சர்வதேச ஊடகங்களில் வெளியான செய்திகளால் இஸ்ரேல் ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் தாக்குதலுக்குப் பின்னர் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பிற்காக மீண்டும் ஒரு அபாயகரமான சூழல் ஏற்பட்டால் தூதரகம் செயற்படும் என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் திரு.நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும், அந்நாட்டில் உள்ள இலங்கை தூதரகம், ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கீழே உள்ள படிமுறைகள்:
- முற்றிலும் அவசியமான காரணத்திற்காக தவிர, வீடு, வேலை செய்யும் இடம், விவசாய நிலம் அல்லது வசிக்கும் இடத்தை விட்டு வெளியே செல்ல வேண்டாம்.
- உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருந்து மற்றும் ஊசி போடுபவர்கள், பல நாட்களுக்கு தேவையான மருந்துகளை வைத்திருங்கள்.
- உலர் உணவு மற்றும் குடிநீரை சேமித்து வைக்கவும்.
- சமூக ஊடகங்களில் பொறுப்பற்ற முறையில் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் விளக்கங்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும். முக்கியமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்புவதைத் தவிர்க்கவும்.
- சில நேரங்களில் இன்டர்நெட், போன் சேவைகள், ஜிபிஎஸ் சேவைகள் அவ்வப்போது செயலிழக்க நேரிடலாம், எனவே உங்கள் நண்பர்களின் போன்கள் செயலிழந்துவிட்டதாக கூறி தேவையில்லாமல் கவலைப்படுவதை தவிர்க்கவும்.
- ஒவ்வொரு வீடு, பணியிடங்களிலும் பாதுகாப்பான அறைகள் மற்றும் தங்குமிடங்கள் இருப்பதால் சைரன்கள் கேட்டால் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும்.
- அவசர காலங்களில் முதியவர்கள் மற்றும் ஊனமுற்றவர்களின் பாதுகாப்பை கவனித்துக் கொள்ளுங்கள். தூதரக அதிகாரிகள் தற்போதைய நிலைமை குறித்து உங்களுக்குத் தெரிவிக்க தயாராக உள்ளனர்.