மேலும் மூன்று வாரத்திற்கு நாடு தொடர் முடக்கம்?
நாடு முடக்கப்பட்டு எட்டு நாட்கள் ஆகின்ற போதும் கூட தொற்றாளர் எண்ணிக்கை குறைவதாக தெரியவில்லை.
இன்று சனிக்கிழமை இரவு 8மணி வரை 3764 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
செப்டெம்பர் 6ம்திகதி வரை நாட்டினை அரசாங்கம் முடக்கியுள்ளது.
இந்நிலையில் முடக்கப்பட்டுள்ள நாட்டினை தொடர்ந்து 03 அல்லது 04 வாரங்களுக்கு முழுதாக முடக்கி வைக்குமாறு அரசிடம் ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டு இருந்தாலும் மக்களது நடமாட்டமும், வாகன போக்குவரத்துக்களும் வழமை போன்றே இடம்பெறுவதாக கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று அச்சறுத்தலில் நாட்டினை முடக்க எடுக்கப்பட்ட தீர்மானமானது மிகவும் அவசியமானது.
நாட்டினது பொருளாதாரத்தினை விட மக்களது உயிரை காப்பதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். எனினும் இன்று நாடு முழுதாக மூடப்படவில்லை.
நாட்டினை முழுதாக முடக்கினால் தொற்றாளர்களை அடையாளம் காணல், பிரதேசங்களைத் தனிமைப்படுத்துவதன் ஊடாக தொற்று சமூக பரவலாவதை தடுக்க முடியும்.
எனினும் நாட்டினது பொருளாதாரத்தை காரணம் காட்டி ஆடைதொழிற்சாலை என பல விடையங்களுக்கு சந்தர்ப்பம் அளித்துள்ளனர்.
கொழும்பு நகரினுள் ஆயிரக்கணகில் வாகனங்கள் வந்து செல்கின்றன. மக்கள் வீதிகளில் நடமாடுகின்றனர். ஒன்று கூடுகின்றனர். இதனால் நாட்டை முடக்கியதன் நன்மையினை எவ்வாறு அடையமுடியும்?
குறைந்தபட்சம் 03 அல்லது 04 வாரங்களேனும் நாட்டை முடக்கிவைத்தால் தொற்றில் இருந்து ஓரளவுக்கேனும் மக்களை காப்பாற்ற முடியுமென அவர் தெரிவித்தார்.
***தொடர்புடைய செய்திகள்***
முதியோர் இல்லத்தில் 44 பேருக்கு கொரோனா!