அமெரிக்க அரசு தமிழர் குழுவோடு வொஷிங்டனில் பேச்சு! பெரும் குழப்பத்தில் கொழும்பு!
இலங்கைத் தமிழர்களின் அரசியல் பிரச்சினையில் இந்தியாவுடன் சேர்ந்து கைகோர்த்து, காய் நகர்த்தத் தீர்மானத்திருக்கும் அமெரிக்கா, அதனை ஒட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் உட்பட தமிழர் தரப்பு சட்ட நிபுணர் குழு ஒன்றை வொஷிங்டன் டி.ஸிக்கு அழைத்து, தமிழர் தரப்பின் அரசியல் நிலைப்பாட்டை கேட்டறிந்து, தெளிவுபடுத்தி கொள்ள தீர்மானித்திருக்கின்றது.
அமெரிக்காவின் இந்த நகர்வு பற்றிய தகவல்கள் கொழும்பு அரசுத் தரப்புகளால் கசிய விடப்பட்டிருக்கின்றது. இவ்விடயத்தை ஒட்டி கொழும்பு, பெரும் இராஜதந்திரச் சீற்றத்தில் இருப்பதாகவும் அந்த தரப்புக்கள் உறுதிப்படுத்துகின்றன.
தற்போதைய ஏற்பாட்டின்படி சுமந்திரன் உட்பட 3 நிபுணர்குழு இன்னும் 10 நாள்களில் அமெரிக்க இராஜாங்க அமைச்சுடனும், அதன் சட்ட நிபுணர்களுடனும் விரிவான பேச்சுக்களில் ஈடுப டும் எனத் தெரிகின்றது.
இந்தக் குழுவிற்கு ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனுடன், ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரன், சட்ட நிபுணர் திருமதி நிர்மலா சந்திரஹாசன் ஆகியோரை சம்பந்தன் நியமித்துள்ளார் என அறிய வந்தது.
தந்தை செல்வநாயகத்தின் புதல்வர் எஸ்.ஸி.சந்திரஹாசன். அவரின் துணை வியார் நிர்மலா சந்திரஹாசன். இவர் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், நல்லூர்த் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இரும்பு மனிதர் என அழைக்கப்பட்டவருமான இ.மு.வி.நாகநாதனின் மகளாவார்.
தற்போது இந்தியாவில் உள்ள அவர் கொழும்புக்கு வந்து, மற்ற இருவருடனும் இணைந்து வொஷிங்டன் பயணமாவார் எனக் கூறப்பட்டது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான திட்டங்கள், யோசனைகளைப் பரிந்துரை செய்வதற்காக 2006 இல் நியமித்த அனைத்துத்தரப்பு நிபுணர் குழுவில் சுமந்திரன் தவிர்ந்த மற்றைய இருவரும் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வொஷிங்டன் – புதுடில்லி அரசுகளின் மிக, மிக உயர்ந்த மட்டத்தில் எடுக்கப்பட்ட மிக முக்கிய தீர்மானத்திற்கு அமையவே இந்தக் காய் நகர்த்தல் மேற்கொள்ளப் படுவதாக அறிந்துள்ள கொழும்பு அரசு வட்டாரங்கள், அதனால் பெரும் கலக் கத்தில் மூழ்கி இருக்கின்றன என்றும் கொழும்புத் தகவல்கள் தெரிவித்தன.
இந்த விடயத்தை அறிந்த பின்னரே, புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சு, தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் கலந்துரையாடல் என்ற அறிவிப்புகளை எல்லாம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவிழ்த்து விட்டார் என்றும் சம்பந்தப்பட்ட கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
கெரவலப்பிட்டிய மின் நிலையப் பங்கு களை அமெரிக்க நிறுவனத்துக்கு அவசர அவசரமாக – இரவோடிரவாக – கைமாற் றும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு, அமெரிக்காவைத் தாஜா பண்ணும் நடவடிக்கையில் – தனது பங்காளிக் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி – கோட்டா அரசு ஈடுபட்டமையின் பின்னணி இதுதான் என விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.
இந்த வொ´ங்டன் சந்திப்பு முதலில் செப்டம்பரில் நடைபெறுவதாக இருந்தது. அச்சமயத்தில் சுமந்திரனுடன் சட்டத்துறை நிபுணர்களான பேராசிரியர் என் செல்வகுமாரன், திருமதி நிர்மலா சந்திரஹாசன் ஆகியோரை சட்ட நிபுணர் குழுப் பிரதிநிதி களாக சம்பந்தன் நியமித்திருந்தார்.
மூவரின் பயணத்திற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. எனினும், கொரோனாத் தொற்று நெருக்கடி காரணமாக இந்தக் கலந்துரை யாடல் தள்ளிப்போனமையால் பேராசிரியர் செல்வகுமார் இந்த மாத நடுப்பகுதியில் அமெரிக்கா செல்ல முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.
அதனால் அவரது இடத்துக்கு ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரனை சம்பந்தன் நியமித்துள்ளார். அடுத்த வாரத்தில் இக்குழு கொழும்பிலிருந்து வொஷிங்டன் பயணமாகும் எனத் தெரிகிறது.