நாளைய ஹர்த்தாலுக்கு தமிழரசு கட்சி ஆதரவு
கொக்குத்தொடுவாயில் காணப்படும் மனித புதைகுழிக்கு நீதிவேண்டுமென வலியுறுத்தி நாளை வெள்ளிக்கிழமை வடக்குக் கிழக்கில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவினை தெரிவிக்கும் விதமாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
தமிழர் பிரதேசங்களில் தமிழின படுகொலை இடம்பெற்று இந்த ஜீலை மாதத்துடன் 40 ஆண்டுகள் நிறைவடைகிறது. எனினும் தமிழ் இனத்திற்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்பது உலகறிந்த வரலாறாகும்.
தமிழின அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களது இந்த காலம் துக்க காலமாகும்.
தமிழ் மக்களுக்கு நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் நாளைய தினத்தைத் துக்க நாளாக அறிவித்துள்ளனர்.
தமிழ் மக்கள் புதைகுழிக்குள் புதைக்கப்பட்டு அழிக்கப்பட்டமை இலங்கையில் கறைபடிந்த வரலாறு.
அந்த ஆத்மாக்களுக்கு ஆறுதலும், வருங்காலம் தமிழினத்துக்கு நீதியும் விடுதலையும் கிடைக்க வேண்டி ஒன்றிணைந்து போராட வேண்டியது அனைவரதும் கடப்பாடாகும். அதற்காக அனைவருக்கும் அழைப்ப விடுவிக்கின்றோம் என அந்த அறிக்கையில் உள்ளது.