பொலிஸ் காவலில் இருந்த நபர் உயிரிழந்த சம்பவம், ஏழு பொலிசார் விளக்கமறியலில்
காவலில் வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஏழு பொலிஸாரை ஜூன் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் உப பொலிஸ் பரிசோதகர், சார்ஜென்ட் மற்றும் ஐந்து கான்ஸ்டபிள்களும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
நாரஹேன்பிட்டியில் உள்ள தொழிற்பயிற்சி அதிகாரசபையின் உதவி முகாமையாளர் 2023 ஜனவரி 10 ஆம் திகதி மதிய உணவு நேரத்தில் உணவகம் ஒன்றிலிருந்து பணிக்கு திரும்பிய போது பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
போதைப்பொருள் தொடர்பான வழக்கு விசாரணைக்காக குறித்த நபரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் அழைத்துச் சென்றது தெரியவந்தது.
விசாரணையின் போது கண்ணாடி போத்தலால் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்க முயற்சித்ததில் குறித்த நபர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
எனினும், உயிரிழந்தவரின் மரணத்திற்கு அவரின் உடலில் ஏற்பட்ட தாக்குதல் காயங்கள் என மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (6) தீர்ப்பளித்தது.
பிரேத பரிசோதனை தொடர்பான உத்தரவை வழங்கிய மாளிகாகந்த நீதவான் மரணத்திற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.
நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, சம்பவத்தில் தொடர்புடைய ஏழு பொலிசார் இன்று கைது செய்யப்பட்டனர்.