போதைப்பொருள் விவகாரம் சர்ச்சைக்குரிய விவகாரமாக உருவெடுத்துள்ளது
போதைப்பொருள் விவகாரமானது சர்ச்சைக்குரிய விவகாரமாக உருவெடுத்துள்ளதென கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் வலய அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் எதிர்நோக்கும் பிரச்சிகைள் தொடர்பான சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் “போதைப்பொருள் வலையமைப்பானது இன்று பாடசாலை கட்டமைப்புக்குள்ளும் ஊடுருவியுள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதுடன் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான நடவடிக்கைகளும் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாடசாலை வளாகத்திலும் , மாணவர்கள் மத்தியிலும் தற்பொழுது பரிசோதனை நடவடிக்கை இடம் பெற்று வருகின்றது. இது தொடர்பில் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட தரப்புகளுக்கு உரிய வகையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல போதைப்பொருள் பாவனையில் இருந்து எமது மாணவ சமுதாயத்தை பாதுகாப்பதற்காக பொலிஸ்சாரினதும் புலனாய்வு பிரிவினரினதும் ஒத்துழைப்பும் கூறப்பட்டுள்ளது.
மேலும் மலையகத்தில் இன்று பல்வேறு பிரச்சனைகள் குவிந்து கிடக்கின்றன. அந்த ஒட்டு மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே தடவையில் தீர்வை கண்டுவிட முடியாது. அவை கட்டம் கட்டமாக நிச்சயம் தீர்க்கப்படும்.
அடுத்து நடைபெற உள்ள தேர்தல் தொடர்பில் எனது கட்சியின் உறுதியான நிலைப்பாட்டை தற்போது அறிவித்து விட முடியாது.
தேர்தல் ஒன்று அறிவிக்கப்படும் பட்சத்தில் கள நிலவரத்தை ஆராய்ந்து அதற்கேற்ற வகையில் உரிய முடிவு எடுக்கப்படும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.