“தற்போதைய வரிக் கொள்கை ஒரு சாதாரண வரிக் கொள்கை அல்ல, மாறாக மீட்பு நடவடிக்கை”
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கருத்துப்படி, இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள வரிக் கொள்கையானது சாதாரண வரிக் கொள்கையல்ல, மாறாக மீட்பு நடவடிக்கையாகும். இந்தச் செயற்பாடு சீர்குலைந்தால், இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்தில் இணைய முடியாது என்றும், வெளிநாடுகளுடன் வர்த்தகம் செய்யும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்றும் ஜனாதிபதி எச்சரித்தார்.
வரிக் கொள்கை தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கையில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சாதாரண வரவு செலவுத் திட்டம் அல்ல, மாறாக பொருளாதாரத்தை மீட்பதற்கான நடவடிக்கை எனவும் குறிப்பிட்டார்.
இலங்கை வர்த்தக சம்மேளனத்தைத் தவிர, வேறு எந்த தரப்பினரும், நபரும் அல்லது நிறுவனமும் சர்வதேச நாணய நிதியத்திற்கு எந்தவொரு முன்மொழிவுகளையும் மாற்று வழிகளையும் சமர்ப்பிக்கவில்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
2023 ஆம் ஆண்டுக்கான வரி மன்றத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள வரி விதிப்புக் கொள்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று (21) கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்பட்டவுடன் அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதனை நிறைவேற்றவோ அல்லது நிராகரிக்கவோ விருப்பம் இருக்கும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். பிரேரணை நிராகரிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட தரப்பினர் மாற்று முன்மொழிவுகளை சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இலங்கை, பாரிஸ் கிளப், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பிரதான கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு செயல்முறை குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இலங்கைக்கான நிதி உதவியை பாரிஸ் கிளப் உறுதி செய்துள்ளதாகவும், இந்தியா தனது சொந்த முறையை பின்பற்றுவதாகவும், ஆனால் சீனா அவ்வாறு செய்யவில்லை என்றும் கூறினார். இதுவரை அதன் முறை பற்றி உடன்பாடு தெரிவித்தார். எவ்வாறாயினும், எதிர்வரும் 23ஆம் திகதி இந்தியாவின் பெங்களூரில் நடைபெறவுள்ள ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் தமது நிலைப்பாடு அறிவிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.