கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாத இலங்கை அரசு வானம் ஏறி வைகுண்டம் போக பிளான் பண்ணின கதை
“கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவேன்’ என்றானாம். இந்த மாதிரி கருத்துரைத்திருக்கின்றார் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச”
“உள்ளகப் பொறி முறை ஊடாக தீர்வு காண முயற்சித்து வருகின்றோம். அடுத்த மாதம் புலம்பெயர் தமிழ் அமைப்புகளோடு அரசு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளது. இக் கலந்துரையாடல் வெற்றிபெற்றால் சர்வதேச தலையீடுகள் இலங்கை மீது இருக்க மாட்டாது”
சர்வதேச பொறிமுறையின் ஊடாக சர்வதேச நிறுவனங்களின் கண்காணிப்பின் கீழ் உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க வேண்டும் என்பதே ஐ.நாவின் நோக்கமாக இருக்கிறது.
ஆனால் தேசிய பொறிமுறையின் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது. தேசிய பொறிமுறையின் ஊடாக சில பெறுபேறுகள் கிடைக்கும் பட்சத்தில் சர்வதேசத்தின் ஒத்துழைப்புகள் கிடைக்கும் எனவும் இலங்கையின் நீதியமைச்சர் நம்புகிறார்.
புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் தானும் அதிபர் ரணிலும் பல கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும், அடுத்த மாதமும் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும், இது வெற்றியடைந்தால், இலங்கையின் உள் விவகாரங்களில் வெளிநாட்டு தலையீடுகளை இல்லாமல் போகும் எனவும், இலங்கைக்கு அவை ஆதரவளிக்கும் எனவும் அவர் நம்புகிறார்.
இந்தக் கருத்துக்களைப் பார்க்கும்போது நீதி அமைச்சரும், ஜனாதிபதியும் யதார்த்தங்கள் பற்றிய புரிதல்களின்றி கனவுலகில் சஞ்சரிக்கின்றனரோ என்ற சந்தேகம்தான் மேலெழுகின்றது.
யுத்த பேரழிவு நடந்த நாட்டில், அதன் போது இழைக்கப்பட்ட குற்றங்களால் பாதிப்புற்ற தரப்புகளும் மக்களும் இங்கு நீதி, நியாயம் வேண்டி குமுறிக் கொண்டிருக்கும்போது, அவர்களின் மனக்கதவைத் தட்ட சற்றேனும் முயற்சி எடுக்காமல், பேரினவாதத் திமிரோடு நடந்தபடி, மறுபுறத்தில் முகம் தெரியாத சில புலம்பெயர் தரப்புகளுடன் தாம் நடத்தும் தந்திரோபாய காய் நகர்த்தல்கள், யுத்தப் பாதிப்புகளினால் கிளர்ச்சி கொண்டிருக்கும் ஓரினக் குழுமத்தையும், அவர்களை கையாண்டு தாஜா செய்வதன் மூலம் மறுபக்கத்தில் நீதியை நிலைநாட்ட வலியுறுத்தும் சர்வதேச சமூகத்தின் கருத்தி யலையும் சமாளிக்கலாம் என்று அவர்கள் பகல் கனவு காண்கின்றனர் என்றே தோன்றுகின்றது
உள்நாட்டில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் அடிப்படைக் கோரிக்கையான உண்மையைக் கண்டறிதல் விடயத்தில் ஓர் அடி கூட எடுத்து வைக்காத – அப்படி நீதி செய்யும் நேர்மையான நோக்கமே கொண்டிராத தென்னிலங்கைப் பேரினவாதம் வைகுண்டம் போவது பற்றி பகல் கனவு காண்கிறது என்பதையே நீதி அமைச்சரின் கருத்துரைப்பு பிரதிபலிக்கிறது.