இந்த நாட்டை ஆட்சி செய்தவர்கள் விடுதலை புலிகளுக்கு சமமானவர்கள்!
அடுத்துவரும் தேர்தல் நாட்டை பாதுகாத்துக்கொள்ள கிடைத்த இறுதி சந்தர்ப்பமாகும். அதனால் அரசியல் வாதிகளிடம் தொடர்ந்து ஏமாறாமல் உண்மையாக சேவை செய்யக்கூடிய சிலரை தெரிவு செய்து நாட்டை கட்டியெழுப்ப தயாராக வேண்டும்.
அத்துடன் இந்த நாட்டை ஆட்சி செய்த அனைத்து அரசியல் கட்சிகளும் விடுதலை புலிகளுக்கு சமமானவர்களாகும் என மிஹிந்தலை மகாநாயக்க தேரர் வளவாஹெங்குணவெவே தம்மரத்ன தெரிவித்தார்.
நாட்டின் எதிர்கால நிலைமை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
நாட்டை ஆட்சி செய்யப்போரவர் யார் என்பது எமக்கு முக்கியம் இல்லை. அதேபோன்று எந்த கட்சி ஆட்சி செய்யப்போகிறது என்பதும் எமக்கு தேவையில்லை.
எமது நாடே எமக்கு முக்கியம். அதனால் தற்போது எங்களுக்கு கதைத்துக்கொண்டிருக்க நேரம் இல்லை. அதேபோன்று போராட்டம் செய்யவோ ஹர்த்தால் மேற்கொள்ளவோ எமக்கு தேவையில்லை.
தற்போது எமக்கு தேவையாக இருப்பது, சிறந்த சிந்தனையும் இலக்கும் உள்ள இளைஞர்களாகும். நூற்றுக்கு ஆயிரம் இன்று ஆட்சியாளர்கள் மக்கள் பக்கம் இல்லை. அதனால்தான் ஆட்சியாளர்கள் கிராமங்களுக்கு செல்லும்போது அந்த பிரதேச மக்கள் அவர்களை விரட்டுகின்றார்கள்.
அதனால் எமது நாட்டை எமக்கு கட்டியெழுப்ப முடியும். அதற்காக உண்மையான, வேலை செய்ய முடியுமான இளைஞர்கள் எமக்கு தேவை. அவர்கள் முன்வரவேண்டும்.
எதிர்வரும் தேர்தல் எமக்கு இறுதி சந்தர்ப்பமாகும். இதனை நாங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தாவிட்டால் எமக்கு இனிஒருபோதும் சந்தர்ப்பம் கிடைக்காது.
அத்துடன் 75 வருடங்களாக அரசியல்வாதிகள் எங்களிடம் வேலை வாங்கினார்கள். அதனால் தற்போது நாங்கள் எங்களுக்கு தேவையான ஒருவரை தெரிவுசெய்துகொள்ள வேண்டும்.
அரசியல்வாதிகள் இந்த ஆட்சியின் சுவையை அறிந்தவர்கள். அதனால் அவர்கள் பொய் வாக்குறுதிகளை வழங்கி எப்படியாவது ஆட்சிக்கு வரவே முயற்சிப்பார்கள்.
அதற்கு மக்கள் ஏமாந்துவிடக்கூடாது. இந்த அரசியல் கட்சிகள் அனைத்தும் விடுதலைப் புலிகளுக்கு சமமானவர்கள். ஏனெனில் இவர்கள் அனைவரும் இந்த நாட்டை அழித்தவர்கள்.
அதனால் நாட்டு மக்கள் அனைவரும் இந்த அரசியல்வாதிகளுக்கு ஏமாந்ததுபோதும் இனியும் ஏமாறக்கூடாது. அதனால் சிறந்த இளைஞர்கள் குழுவை இணைத்துக்கொண்டு நாட்டை பாதுகாக்கும் நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்ள வேண்டும். அதனை எங்களால் செய்ய முடியும் என்றார்