பேஸ்புக்கில் மாவீரர் தின பதிவிட்ட மூவர் கைது!
தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பு தொடர்பான தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த மூன்று நபர்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) மற்றும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் (டிஐடி) கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் மருதானை, சுன்னாகம் மற்றும் பத்தேகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 28, 35 மற்றும் 45 வயதுடையவர்களாவர்.
தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சந்தேகநபர்கள் பேஸ்புக்கில் பகிர்ந்ததாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த எல்.ரீ.ரீ.ஈ மாவீரர் நாள் கொண்டாட்டங்களின் பழைய காட்சிகளை இவ்வருட நிகழ்வுகளைப் போன்று பரப்பியதாகவும் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பொது அமைதியின்மையை தூண்டுதல், தடைசெய்யப்பட்ட அமைப்பின் செயற்பாடுகளை ஊக்குவித்தல் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக தவறான தகவல்களை பரப்புதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தண்டனைச் சட்டம் பிரிவு 120 மற்றும் 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 27 வது பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டின் சட்டங்களை மீறும் மற்றும் தேசிய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எந்தவொரு செயலையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படுமென அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.