உருமாறும் முப்படை தளங்கள் – முல்லையிலும் இன்று மாறியது
வடகிழக்கிலுள்ள முப்படைகளையும் தொடர்ந்தும் பேண அனுர அரசும் மும்முரமாக காய் நகர்த்தல்களை முன்னெடுத்துள்ளது.
இந்நிலையில் இலங்கை விமானப்படை முல்லைத்தீவு முகாமை “தடுப்பு மையமாக” பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று திங்கட்கிழமை (30) வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு விமானப்படைத் தளம் தடுப்பு முகாமாக செவ்வாய்க்கிழமை (31) முதல் இயங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரால் அண்மையில் முல்லைதீவு கடலில் மீட்கப்பட்ட 103 மியான்மர் அகதிகள் முல்லைத்தீவில் உள்ள விமானப்படை முகாமுக்கு தற்காலிக காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவுக்கமைய மிரிஹான தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த போதிலும், மிரிஹான தடுப்பு முகாமில் போதிய தங்குமிட வசதிகள் இல்லாததால், அகதிகளை முல்லைத்தீவு விமானப்படைத் தளத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் வடகிழக்கிலுள்ள முப்படை தளங்களையும் முடிவிட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் போதைபொருள் புனர்வாழ்வு மையம் மற்றும் தடுப்பு மையமென திறக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.