முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை!

ரூ. 20 மில்லியன் மதிப்பிழந்த காசோலை மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத முன்னாள் அமைச்சரும் ஈபிடிபி செயலாளருமான  டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன நேற்று (21) உத்தரவிட்டுள்ளார்.

வெள்ளவத்தையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனோகரன் என்ற வர்த்தகர் தனக்கு மதிப்பிழந்த காசோலையை கொடுத்து இருபது மில்லியன் ரூபா மோசடியில் ஈடுபட்டதாக, டக்ளஸ் தேவானந்தா செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சியங்களை வழங்க நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் (21) இது பற்றிய வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சாட்சிக்கு உடல்நிலை சரியில்லாததால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என சாட்சி சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.

சுகவீனம் தொடர்பான மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால், நீதவான் அவருக்கு பிடியாணை பிறப்பிக்க உத்தரவிட்டார்.

2016 ஆம் ஆண்டு ஜூலை 09 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த தினமொன்றில், வெள்ளவத்தையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனோகரன் என்பவர், வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்பதை அறிந்தும், தலா 10 மில்லியன் ரூபாவுக்கான 2 காசோலைகளை வழங்கி மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வழக்கின் முதல் சாட்சியான டக்ளஸ் தேவானந்தாவுக்கு சாட்சியமளிக்க நீதிமன்றத்தினால் திகதி வழங்கப்பட்ட நிலையில், அவர் அதற்கு ஆஜராகாமல் தவிர்த்ததாக சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சம்பத் ஹேவா பத்திரண நீதிமன்றில் தெரிவித்தார்.

இதன்படி, சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதவான், சாட்சிக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து முறைப்பாடு மீதான விசாரணையை 2025 ஜனவரி 23ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.