Trending

எமது நிலமும் பறிபோய், இனப் பரம்பலும் மாற்றப்பட்ட பின் சமஷ்டியை பெற்று என்ன பயன்?

நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் கேள்வி

(LBC Tamil)13வது திருத்தத்தை வேண்டாம் என எதிர்ப்பவர்கள், எமது நிலமும் பறிபோய் , இனப் பரம்பலும் மாற்றப்பட்டதன் பின்னர் சமஷ்டியை பெற்று என்ன பயன் என நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று (29.07.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிலர் 13வது திருத்தம் வேண்டாம், 13ஐ கேட்பவர்கள் துரோகிகள் என தொடர்ச்சியாக கூறி கொண்டு வருகிறார்கள்.

அவர்கள் கூறும் போது நானும் 13ஐ வேண்டாம் என கூறிவந்த நிலையில் தற்போது 13வது திருத்த சட்டம் வேண்டும் என கூறுகின்றேன் எனக் கூறுகிறார்கள்.

நாங்கள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான ஆரம்ப புள்ளியாக பதின்மூன்றை ஏற்றுக்கொண்டோமே அல்லாமல் தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வாக இன்றும் பதின்மூன்றை ஏற்கவில்லை.

தற்போதைய சூழ்நிலையில் எமக்கு வழங்கப்பட்டுள்ள 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தாது போனால் தமிழ் மக்களின் இருப்புக் கூட கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

காணிகள் பறிபோனபின் சமஷ்டி யாருக்கு?

வடக்கில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள், தொல்லியல் மற்றும் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில் அபகரிக்கப்பட்டு வருவதுடன் நிலத்திணிவுகளை பெரும்பான்மையினர் வாழும் மாகாணங்களுடன் இணைக்கும் செயற்பாடுகளும் இடம்பெற்று வருகிறது.

அது மட்டுமல்லாது மகாவலி என்ற போர்வையில் தமிழ் மக்களின் பூர்வீக வாழ்விடங்களில் சிங்கள குடியேற்றங்கள் நிறுவப்பட்டு வரும் நிலையில் அதனை தடுப்பதற்கு 13 வது திருத்தத்தில் வழங்கப்பட்ட காணி அதிகாரத்தை பயன்படுத்த முடியும்.

மேலும் தமிழ் மக்கள் மற்றும் தமிழ் புத்திஜீவிகள், துறை சார்ந்த நிபுணர்கள் எனப் பலரும் நாட்டை விட்டுத் தொடர்ச்சியாக வெளிநாடுகள் சென்று கொண்டிருக்கும் நிலையில் தமிழ் இன விகிதாசாரம் வெகுவாகக் குறைந்து வருகிறது.

இவ்வாறான ஒரு நிலையில் பதின்மூன்று வேண்டாம் சமஸ்டி தான் வேணும் என கேட்பவர்கள் இவ்வளவு விடயங்களும் நடந்து முடிந்த பின்னர் சமஷ்டி பெற்று என்ன செய்யப் போகிறார்கள்.

ஒரு இனத்தின் அடையாளத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு நிலப்பரப்பு அவசியம் நிலங்களை இழந்து எமது அடையாளங்களை காக்க முடியாது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் கட்சிகளின் தலைவர்களை அண்மையில் சந்தித்து கலந்துரையாடிய நிலையில் பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கூறினோம்.

இறுதியாக இடம் பெற்ற சர்வ கட்சி மாநாட்டில் தமிழ் கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்த ஜனாதிபதி பெரும்பான்மை இன கட்சிகளை சேர்ந்த கட்சியின் தலைவர்களையும் மாநாட்டுக்காக அழைத்திருந்தார்.

பதின்மூன்று தொடர்பில் கலாநிதி கந்தையா விக்னேஸ்வரன் தயாரித்த வரைவு ஒன்றை ஏற்கனவே ஜனாதிபதியிடம் நாம் கையளித்து உள்ள நிலையில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த கட்சிகளின் தலைவர்களை ஏன் ஜனாதிபதி எம்முடன் அழைத்தார் எனச் சிந்தித்தேன்.

ஒருவேளை பதின்மூன்றைக் குழப்புவதற்காக அழைத்தாரோ என சிந்தித்தபோது நடைபெற்ற மாநாட்டில் சிலரை தவிர பெரும்பாலானோர் பதின்மூன்று தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டை கொண்டிருந்தனர்.

பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு முன்னர் கூறிய சுமந்திரன் இறுதியாக இடம்பெற்ற சர்வ கட்சி மாநாட்டில் 13-ஐ நடைமுறைப்படுத்துவதை விடுத்து மாகாண சபை தேர்தலை உடனடியாக வைக்குமாறு கூறினார் அதற்கு ஜி.எல்.பீரிஸ் ஆதரவாக பேசினார்.

சுமந்திரனுடைய கருத்தினால் கோபமடைந்த ஜனாதிபதி ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு கருத்தை கூற வேண்டாம் முதலில் பதிமூன்றை நடைமுறைப்படுத்துமாறு கூறினீர்கள் தற்போது தேர்தலை கேட்கிறீர்கள் முதலில் உங்களின் நிலைப்பாட்டை சரியாக அறிந்து வாருங்கள் என கூறினார்.

அன்று இரவு எனக்கு தொலைபேசியில் அழைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுமந்திரன் தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என்கிறார் உங்களின் நிலைப்பாடு என்ன நாங்கள் கலந்துரையாடல்களை தொடர்ந்து நடத்துவதா இல்லையா என கேட்டார்.

சுமந்திரன் கருத்தை சாதகமாக வைத்து குழப்ப வேண்டாம். சுமந்திரனுடைய கருத்தை சாதகமாக பயன்படுத்தி பதின்மூன்றை நடைமுறைப்படுத்தும் விடயங்களில் இருந்து நழுவக்கூடாது என தெரிவித்தேன்.

பதின் மூன்றை நடைமுறைப்படுத்துமாறு இந்தியாவை கோரிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன் உடல்நல குறைவுக்காக சுமந்திரன் பங்குபற்றியுள்ளார்.

அவரின் கருத்தை சாட்டாக வைத்து 13 நடைமுறைப்படுத்துவதில் இருந்து தாங்கள் விலகிக்கொள்ள பார்க்கிறீர்களா என ஜனாதிபதியிடம் கேட்டேன்.

அதற்கு அவ்வாறு இல்லை பதின்மூன்று தொடர்பில் எமது கலந்துரையாடல்களை முன்னோக்கி கொண்டு செல்வோம் நாங்கள் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுக்கு முன்னர் பேசுவோம் என்றார்.

ஆகவே தமிழ் மக்களின் அரசியல் அவிலாசைகளை பெற்றுக் கொள்வதற்கு தமிழ் மக்களின் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கு அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள 13வது திருத்தத்தை தமிழ் கட்சிகள் ஓரணியில் நின்று நடைமுறைப்படுத்த வேண்டும் என விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழில் இராணுவ ஆட்சி பிரகடனமா? சட்டத்தரணி சுகாஸ் கேள்வி!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.