குருந்தூர் மலை யாருக்கு சொந்தம், தீர்ப்பு 27ம் திகதி
முல்லைத்தீவு குருந்தூர் மலை வழக்கு 27ம் திகதிக்கு தவணை இடப்பட்டுள்ளது.
இவ்வழக்கு விசாரணை நேற்று (13.10.2022) மாவட்ட நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது.
இதன்போது குருந்தூர் மலை ஆதிஐயனார் ஆலய நிர்வாகம் சார்பிலான சட்டதரணிகளும், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயம் சார்பில் சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகளும் மற்றும் பௌத்த பிக்கு சார்பிலான சட்டதரணிகளும் மன்றில் முன்னிலை ஆகினர்.
2020ம் ஆண்டு மன்றில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கையின் படி உரிய திணைக்களங்களுக்கு அறிவித்து அதன் அடிப்படையிலேயே குருந்தூர் மலையில் புனரமைப்பு வேலை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
குருந்தூர் மலையில் இன மத முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் புதிய கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக ஆதிஐயனார் ஆலயம் சார்பில் முன்னிலையான சட்டதரணிகள் வாதங்களை மன்றில் முன்வைத்தனர்.
இந்நிலையில் இருதரப்பு வாதங்களையும் அடுத்து வழக்கின் கட்டளைக்காக 27ம் திகதிக்கு வழக்கு தவணையிடபட்டுள்ளது.