சுயேச்சையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது ஏன்?
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் களை கட்டியுள்ளது. இதில், சுயேச்சை வேட்பாளர்கள் அல்லது பல கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பொது வேட்பாளர்கள் பலர் களம் காண்கின்றனர்.
தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க கடந்த 40 ஆண்டுளாக தாம் பிரதிநிதித்துவப்படுத்திய யானை சின்னத்தை கைவிட்டு சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இலங்கையின் பழமையான, பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிடாமல் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவது ஏன்? அது அவருக்கு பலன் தருமா?
ரணில் விக்ரமசிங்க சுயேச்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள போதிலும் உண்மையில் அவர் சுயேச்சை வேட்பாளர் அல்ல என அரசியல் ஆய்வாளர் கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
“ரணில் உண்மையில் சுயேச்சை வேட்பாளர் அல்ல. அவரைச் சுற்றி பல அரசியல் கட்சிகள் உள்ளன. ஆனால் அந்த கட்சிகள் அனைத்தும் மக்களால் நிராகரிக்கப்பட்ட பலவீனமான கட்சிகள்.” என்கிறார் அவர்.
ரணில் விக்ரமசிங்க சுயேச்சை வேட்பாளராக நிற்பது அவருக்கு சாதகமாக இருப்பதாகத் தோன்றினாலும் அதில் உண்மையில்லை என கலாநிதி தயான் ஜயதிலக்க கூறினார்.
ரணில் விக்ரமசிங்க சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பாக பேராசிரியர் ஜயதேவ உயங்கொடவுக்கு மாறுபட்ட கருத்து உள்ளது.
ரணில் விக்ரமசிங்க அதிபர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுவது, அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சி எங்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்பதைக் காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதால் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்ததிலிருந்து, இதை அவரே ஒப்புக்கொண்டதாக நான் பார்க்கிறேன். சுயேச்சையாகப் போட்டியிடுவதன் மூலம் அவர் குறிப்பிடத்தக்க பலன்களைப் பெறுவார் என்று எதிர்பார்க்க முடியாது” என்றார்.
ஆனால், ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பதிலாக சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவது மிகவும் சாதகமானது என அக்கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டதன் காரணமாக ரணில் விக்ரமசிங்க பல கட்சிகளின் ஆதரவைப் பெற்றுள்ளதாக பிபிசி சிங்களத்திடம் அவர் தெரிவித்துள்ளார்.
“கடந்த இரண்டு ஆண்டுகளில் ரணில் விக்ரமசிங்க நாட்டுக்காக என்ன செய்தார் என்பது மக்களுக்கு தெரியும். அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் சார்பாக போட்டியிடாமல் அனைத்து கட்சிகளின் ஆதரவையும் பெறும் நோக்கில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.” என்றார் அவர்.
அதன்படி, அதிபர் தேர்தலுக்கு பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராக இருக்கலாமா அல்லது கூட்டணியுடன் இருக்கலாமா என்பது குறித்து பரிசீலிப்பதாக பிரதித் தலைவர் தெரிவித்தார்.
பேராசிரியர் ஜயதேவ உயங்கொட குறிப்பிட்டது போல், அண்மைக்காலத்தில் மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்த பிரதான அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியாகும்.
அதன் முன்னாள் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் பெரும்பான்மையானவர்கள் அக்கட்சியை விட்டு வெளியேறி சமகி ஜன பலவேகய என்ற புதிய கட்சியை உருவாக்கினர். அதன் பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஒரேயொரு இடத்தை மட்டுமே வென்றது.
ரணில் விக்ரமசிங்க அந்த தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினரானார்.
கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து எழுந்த எதிர்ப்பையடுத்து, கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி பதவியை விட்டுக்கொடுக்க நேரிட்டது. அவருக்குப் பதிலாக ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்தில் ஒரு இடத்தைப் பெற்ற ரணில் விக்ரமசிங்க 2022 ஆம் ஆண்டில் இலங்கையின் 8 வது ஜனாதிபதியாக பதவியேற்றார்.
எதிர்பாராத விதமாக ரனில் விக்கிரமசிங்க முதல் முறையாக இலங்கையின் ஜனாதிபதியானார்.
சந்திரிகா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப் பகுதியில் 2001ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 109 ஆசனங்களை பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
இதன்மூலம், ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றார். இலங்கையில் அப்போது பிரதமருக்கு அதிக அதிகாரம் இருந்தது. அந்த காலப் பகுதியில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை ரணில் கைப்பற்றியிருந்தார்.
இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் நார்வே தலையீட்டில் சமாதான பேச்சுவார்த்தை 2002ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு, பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இந்த போர் நிறுத்தம் காணப்பட்ட காலப் பகுதியிலேயே 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ வெற்றியீட்டிய நிலையில், 2006ம் ஆண்டு போர் நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வந்து, போர் மீண்டும் ஆரம்பமானது.
2005ம் ஆண்டு தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என வடக்கு, கிழக்கு மாகாண மக்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கோரிக்கை முன்வைத்தது. இதனால், அந்த மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் வாக்களிப்பதை பெருமளவு புறக்கணித்திருந்தனர்.
அந்த தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் வாக்களிக்காமையே, ரணில் விக்ரமசிங்கவின் தோல்விக்கு காரணம் என கருதப்பட்டது.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் இன்றும் இருக்கின்ற நிலையில், 2005ம் ஆண்டு விடுதலைப் புலிகள் வெளியிட்ட அறிவிப்பு 2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தாக்கம் செலுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதற்கு பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான பாரதி ராஜநாயகம், ”இந்த காலக் கட்டத்திலும் அவ்வாறான கருத்து சிலரால் முன்வைக்கப்பட்டு வருகின்றது. தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூட முன்வைக்கின்றது. எனினும், ஜனாதிபதி தெரிவில் தமது பங்களிப்பும் இருக்க வேண்டும் என தமிழர்கள் எண்ணுகின்றார்கள். இந்த நிலையில், தேர்தல் புறக்கணிப்பு என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டாலும், அது எந்தளவு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதை நிச்சயமாக சொல்லமுடியாது” என தெரிவித்தார்.
(பிபிசி தமிழ்)