விமானப்படை வீரரை பொலிஸ் மற்றும் STF சேர்ந்து சுட்டு கொலை செய்தது ஏன்?
கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்ட பாதுக்கை – அங்கமுவ பகுதியில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் சேர்ந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இன்று திங்கட்கிழமை (8) காலை விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் வீதிதடைக்கு அருகில், உத்தரவை மீறிசென்ற மோட்டார் சைக்கிளை செலுத்திய விமானப்படை வீரர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இதனை அடுத்து பொலிஸார் பதிலுக்கு மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் மோட்டார் சைக்கிளில் பயணித்த விமானப்படை வீரர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
ஹொரணை – தல்கஹவில பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (7) மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவரை குறித்த விமானப்படை வீரர் கொலை செய்திருக்கலாம் என தாங்கள் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து இலங்கை விமானப்படையின் ஊடகப் பணிப்பாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவிக்கையில்,
இன்று காலை பாதுக்கையில், உள்ள பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அருகில் உள்ள விமானப்படையின் ரக்பி பகுதியில் கடமையில் இணைக்கப்பட்டிருந்த விமானப்படையின் கோப்ரல் தர வீரர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். ஆனாலும் அவர் இன்று கடமையில் இருக்கவில்லை.
இந்த சம்பவம் குறித்து விமானப்படை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. விமானப் படை வீரர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அதற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.