ஆஷு மாரசிங்கவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய கோரும் சிவில் மற்றும் மிருக நல பாதுகாப்பு அமைப்புகள்
(LBC Tamil) ஜனாதிபதியின் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கான முன்னாள் ஆலோசகர், பேராசிரியர் ஆஷு மாரசிங்க விலங்கொன்றை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் காணொளி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளின் முன்னேற்றத்தை அறியத்தருமாறு கோரி பீப்பள்ஸ் டுமோரோ அமைப்பு இன்று(25) பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்தது.
பீப்பள்ஸ் டுமோரோ அமைப்பின் தலைவர், சட்டத்தரணி அமில எகொடமஹவத்த, சமூக செயற்பாட்டாளர் லெசில் டி சில்வா உள்ளிட்டவர்களும் பொலிஸ் தலைமையத்திற்கு சென்றிருந்தனர்.
ஆஷு மாரசிங்கவினுடையது என கூறப்படுகின்ற காணொளியின் உள்ளடக்கத்திற்கு அமைய அவர் பாரிய குற்றம் இழைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பீப்பள்ஸ் டுமோரோ அமைப்பு தமது கடித்தில் சில விடயங்களை பொலிஸ் மா அதிபரிடம் கோரியுள்ளது.
யாரின் வழிகாட்டுதலுக்கு அமைய குற்றவாளிக்கு எதிராக இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?
பேராசிரியர் ஆஷு மாரசிங்க தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள உடனடி நடவடிக்கைகள் என்ன?
எதிர்காலத்தில் இத்தகைய துன்புறுத்தல்கள் இடம்பெறாதிருப்பதற்கு எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் என்ன?
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை நடத்துமாறு இலங்கை மிருக நல மற்றும் மிருக உரிமைகள் செயற்பாட்டாளர்களின் ஒன்றியம் பொலிஸ் மா அதிபரிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கை மிருக நல மற்றும் மிருக உரிமைகள் செயற்பாட்டாளர்களின் ஒன்றியம் இலங்கையின் விலங்குகள் நலனுக்காக செயற்படுகின்ற முக்கிய அமைப்பாகும்.
விசாரணைகளை துரிதப்படுத்தி நீதியை பெற்றுக் கொடுக்குமாறு அந்த அமைப்பு கோரியுள்ளது.
விசாரணைகளுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதை தடுக்குமாறும் குறித்த காணொளி உண்மையானது என்றால் ஆஷு மாரசிங்கவை கைது செய்து தண்டனை வழங்குமாறும் இலங்கை மிருக நல மற்றும் மிருக உரிமைகள் செயற்பாட்டாளர்களின் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
இந்த செயற்பாடு சட்டத்தை மீறும் வகையில் அமைந்துள்ளதாகவும் குறித்த நபர் சிறுவர்கள், விலங்குகள் மற்றும் சமூகத்திற்கு அச்சுறுத்தல் எனவும் அந்த அமைப்பு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.