இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!
வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் நாளை அதிகாலை 04.30 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் கடும் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையை அண்மித்துள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். வடமத்திய மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் சில இடங்களில் இன்று சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் தென்கிழக்கே மட்டக்களப்பில் இருந்து 290 கிலோமீற்றர் தொலைவிலும், திருகோணமலைக்கு 410 கிலோமீற்றர் தொலைவிலும் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அடுத்த 12 மணித்தியாலங்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து இலங்கையின் கிழக்கு கடற்கரைக்கு மிக அருகில் நகரக்கூடும்.
இதன்படி, இந்த அமைப்பின் தாக்கத்தினால் தீவின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று மிக அதிக மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தீவின் பெரும்பாலான இடங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். தீவின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் இன்று முதல் மறு அறிவித்தல் வரை நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவும் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று வடகிழக்கு திசையில் வீசும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர்களாக காணப்படும்.