ஈரானுக்கு ஐ.நா. எச்சரிக்கை!
ஈரானில் உள்ளாடை மட்டுமே அணிந்து அரை நிர்வாணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியை கைது செய்ததற்கு ஐக்கிய நாடுகள் அவை எச்சரித்துள்ளது. ஐ.நா. சர்வதேச மனித உரிமை அமைப்பின் ஈரானுக்கான பிரதிநிதி மய் சாடோ, கைது செய்யப்பட்ட மாணவியின் விவகாரத்தை கண்காணித்து வருவதாக கூறியுள்ளார்.
டெஹ்ரானில் உள்ள இஸ்லாமிக் ஆஸாத் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவியாகிய அந்த பெண், ஈரானின் கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகளை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் பரவிவரும் நிலையில், காவல் துறையினர் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளார்கள்.
மயி சாடோ, “அதிகாரிகள் நடந்துகொள்ளும் விதம் உள்பட இந்த விவகாரத்தில் அனைத்தையும் கூர்ந்து கண்காணித்து வருகிறேன்” என பதிவிட்டுள்ளார். மேலும், அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் பலர் கோரிக்கைகள் எழுப்பியுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற மனித உரிமை செயல்பாட்டாளர் நர்கீஸ் முகமதி, சிறையில் இருந்து அறிக்கை வெளியிட்டு, “இப்பெண் தனது போராட்டத்துக்காக உரிய விலை கொடுக்க நேரிடலாம். ஆனால், வற்புறுத்தலுக்கும் ஆதிக்கத்துக்கும் தலைவணங்க வேண்டாம்” என கூறியுள்ளார்.
இந்த சம்பவம், ஈரானில் பெண்கள் எதிர்கொண்டு வரும் ஆடைக்கட்டுப்பாடுகளின் நீண்ட வரலாற்றை வெளிப்படுத்துகிறது. மேலும், குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் பெண்களை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கான அழைப்புகள் எழுகின்றன.