கூட்டமைப்பை நம்பவைத்து கழுத்தறுத்த கோட்டா! – சஜித் அணி சாடல்
“தமிழ் தேசிய கூட்டமைப்பினரை பேச்சுவார்த்தைக்கு என அழைத்து ஏமாற்றியவர்கள்தான் ராஜபக்சக்கள். அண்மையில் கூட பேச்சு என்று தெரிவித்து விட்டு அதனை நடத்தாமலே அதனை ஒத்தி வைத்துள்ளனர்.” என சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுசெயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது,
“ராஜபக்ச அரசானது ஒருபோதும் புதிய அரசியலமைப்பை கொண்டுவர போவது இல்லை. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை ஒருபோதும் வழங்க போவதும் இல்லை. இது வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கும், அவர்களது பிரதிநிதிகளான கூட்டமைப்பினருக்கும் தெரிந்த விடயம்.
கடந்த கால ராஜபக்சக்களின் ஆட்சியின் போது பேச்சு மேசைகளுக்கு என பல தடவைகள் கூட்டமைப்பினர் அழைக்கப்பட்டு இறுதியில் ஏமாற்றப்பட்டனர்.
அதேபோல இந்த ஆட்சியிலும் கூட 1வது பேச்சைக்கூட நடத்தாமல் கூட்டமைப்பினரை ஜனாதிபதி ஏமாற்றியுள்ளார்.
1வது பேச்சுக்கு முதல் நாள் காலை அழைப்பு விடுத்த ஜனாதிபதி செயலகம், அன்று மாலையே பேச்சை இரத்துச் செய்ததாக செய்திகள் வெளியாகின.
குறித்த பேச்சானது இரத்து செய்ய பட்டமைக்கான காரணத்தினை ஜனாதிபதி செயலகம் இன்னமும் அறிவிக்கவில்லை. எனினும், சர்வதேச அழுத்தத்தை சமாளிக்கவே தமிழ் தேசிய கூட்டமைப்பினரை ஜனாதிபதி அழைத்திருந்தார் என்பது உண்மை.
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி மலர்ந்தால் தமிழர்களுக்கான தீர்வை நிச்சயமாக நாம் வழங்கியே தீருவோம் என்றார்.