கோட்டாகோகம தாக்குதல் உள்ளிட்ட 3 சம்பவ அறிக்கை வௌியினது
(LBC Tamil) 2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு மத்தியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக Right To Life மனித உரிமைகள் மத்திய நிலையம் இன்று அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
நாட்டில் இடம்பெற்ற முக்கியமான மூன்று சம்பவங்கள் குறித்து ஆராயப்பட்டு, அந்த அறிக்கையில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ரம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம், கோட்டாகோகம மீதான தாக்குதல், மே 9 ஆம் திகதி மாலை வேளையில் இடம்பெற்ற பழிவாங்கும் தொடர் தாக்குதல்கள் என்பன தொடர்பில் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையில் சில பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் கட்டளைச் சட்டத்தை தற்காலத்திற்கு ஏற்றவாறு புதுப்பிப்பது, சுயாதீன ஆணைக்குழுக்கள் ஊடாக விசாரணை நடத்துவது, அந்த விசாரணைகள் மூலம் தெரியவந்த தகவல்களை ஆவணப்படுத்துவதற்கு உண்மையை கண்டறியும் ஆணைக்குழு போன்ற ஒரு பொறிமுறையை ஏற்படுத்துவது என்பன அதில் உள்ளடங்கியுள்ளன.
சம்பவங்களின் போது ஆட்சியில் இருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் , சிரேஷ்ட அரச உத்தியோகத்தர்களின் பொறுப்புகள் அல்லது பொறுப்பற்ற தன்மை தொடர்பாக விசேட விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அந்த அமைப்பு பரிந்துரைத்துள்ளது.