சூறாவளி புயல்: வானிலை அறிவிப்பு!
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இன்று காலை திருகோணமலைக்கு வடகிழக்கே 100 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து இலங்கையின் கிழக்கு கடற்கரையை நெருங்கி இன்று மேலும் வலுவடைந்து சூறாவளி புயலாக மாறும்.
இந்த அமைப்பின் செல்வாக்கின் கீழ், தீவின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், பல பகுதிகளில் மிக பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மிக பலத்த மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று எதிர்பார்க்கலாம்.
சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும். தீவின் ஏனைய இடங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.
வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என்பதால், நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகள் கொந்தளிப்பாகவும் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள சில இடங்களில் மிக பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சுமார் 2.5 – 3.0 மீற்றர் உயரம் கொண்ட அலைகள் அதிகரிக்கலாம். மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அண்மித்த கடற்பரப்புகளில் அலைகள் சீற்றம் காரணமாக எழுச்சியுடன் காணப்படும்.
கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் மறு அறிவித்தல் வரை தீவைச் சுற்றியுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது