ஜனாதிபதி, பிரதமரின் புத்தாண்டு வாழ்த்து செய்திகள்
(LBC Tamil) 2023ஆம் ஆண்டு அனைவருக்கும் பல்வேறு எதிர்பார்ப்புகளை சுமந்ததாக பிறந்துள்ளது.
மத வழிபாடுகளுடனும் கேளிக்கை கொண்டாட்டங்களுடன் 2023ஆம் ஆண்டை இலங்கை வாழ் மக்கள் வரவேற்றனர்.
மலர்ந்திருக்கும் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரும் தமது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.
இலங்கை சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைகின்ற போதிலும், பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுதலையடைந்த ஏனைய நாடுகள் அடைந்துள்ள முன்னேற்றத்தை இலங்கை இன்னும் அடையத் தவறியுள்ளதாக ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே, நாட்டிலுள்ள பெரும்பான்மையான இளைஞர்கள் தற்போதுள்ள அரசியல் முறைமையில் மாற்றம் வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அக்கோரிக்கையைப் புறக்கணிக்க முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் தசாப்தத்திற்குள் வளமான இலங்கையை கட்டியெழுப்ப உத்தேசித்துள்ள சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பல்வேறு சவால்களை எதிர்கொண்டு மிகச் சிறந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் கிராமிய பொருளாதார மறுசீரமைப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கி, ஏனைய துறைகளுக்கான முன்னேற்றம் தொடர்பிலும் தொடர்ச்சியாக செயற்பட வேண்டும் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.