ஜனாதிபதி ரணிலின் வீட்டுக்கு தீவைத்த ஆசிரியர் கைது
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது கொள்ளுப்பிட்டியில் அத்துமீறி நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய குற்றத்தில் சந்தேகநபர் ஒருவர் நவுத்துடுவ கிரந்திடிய பிரதேசத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் (36 வயது ) ஆசிரியர் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இப்போராட்டத்தின் போது, கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இரவு, கொள்ளுப்பிட்டியில் உள்ள ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்குள் பலவந்தமாக நுழைந்த போராட்டக்குழுவினர் அவரது சொத்துக்களைத் தாக்கி தீயிட்டு சேதப்படுத்திய குற்றச்சாட்டின் விசாரணை நடைபெற்று வருகிறது.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட புலனாய்வுப் பிரிவினராலே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக 25க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் . சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.