தூசு தட்டப்படுகிறது தராகி சிவராம் படுகொலை வழக்கு
அனுர அரசில் மீள சானி சேவைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் அவரால் முன்னெடுக்கப்பட்ட தராகி சிவராம் படுகொலை உள்ளிட்ட வழக்குகள் தூசு தட்டப்படுகின்றது. இந்நிலையில் முன்னணி கொழும்பு ஊடக வியலாளர் ஒருவர் சானியின் வரலாற்றினை இவ்வாறு பதிவு செய்துள்ளார்
இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தில் ஷெர்லக் ஹோம்ஸ் என்று அழைக்கப்படும் கீர்த்திமிகு பொலிஸ் அதிகாரியும் முன்னாள் சீ.ஐ.டி பணிப்பாளருமான ஓய்வு பெற்ற ஷானி அபேசகர மீண்டும் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் பொலிஸ் சேவைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.
இம்முறை அவருக்கு Criminal intelligence Analysis and prevention division பணிப்பாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.
ஷானி என்ற நாமம் 1999ம் ஆண்டு தான் இலங்கையில் மெல்ல மெல்ல பிரபல்யமடையத் தொடங்கியது.
ஜனாதிபதி சந்திரிக்காவுக்கும் நடிகர் சனத் குணதிலக்கவுக்கும் காதல் தொடர்பு இருப்பதாய் அப்போது சிங்கள வாசகர்கள் மத்தியில் வெகுபிரபலமாக இருந்த சட்டன பத்திரிகை எழுதியது.இப்பத்திரிகை ஆசிரியர் பெயர் ரோஹன குமார . அவர் மஞ்சள் பத்திரிகை தரத்திற்கு இறங்கி அடித்தார்.
இதேவேளை அவுஸ்ரேலியாவில் இருக்கும் குருபரன் என்ற கோடீஸ்வரர் சேனல் 9 என்ற தொலைக்காட்சிச் சேவையை இலங்கையில் தொடங்க சனத் குணத்திலக்கவின் நண்பர் லக்ஷ்மன் ஹுலுகொல்லவை அணுகினார். அனுமதிப்பத்திரம் பெற்றுத் தந்தால் பதிலுக்கு 20 மில்லியன் டொலர் லஞ்சம் தர ஒப்புக் கொண்டார் குருபரன்.
ஆனால் சந்திரிக்காவும் காமினி ராஜநாயகம் என்ற பிணாமி பெயரில் தொலைக்காட்சியின் பங்குதாரராக விரும்பினார். இதை எல்லாம் வெட்டவெளிச்சமாக்கின சட்டனவும் சண்டே லீடரும்.
முடிவு , பெத்தகானே சஞ்சீவ என்ற அரச அனுசரணை பெற்ற அந்நாளின் பாதாள உலக தாதாவால் ரோஹன குமார படுகொலை செய்யப்பட்டார்.
நாடு முழுக்கப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அப்படுகொலையின் சூத்திரதாரி பெத்தகான சஞ்சீவ என்று சீ ஐ டி இளம் உப பொலிஸ் பரிசோதகரான ஷானி கண்டு பிடித்த போது உடனே விசாரணை நிறுத்தப்பட்டது.
2005ம் ஆண்டு ராஜகிரிய ரோயல் பார்க்கில் நடந்த ஸ்வீடன் யுவதியான இவான் ஜோன்ஸன் படுகொலையும் நாட்டை உலுக்கிய துயரங்களில் ஒன்று .சாட்சியே இல்லாமல் நடந்தேறிய அப்பயங்கரத்தின் பின்னணியை விசாரித்தவரும் ஷானி தான்.ஆங்காங்கே பதிந்திருந்த கைரேகைகள் மூலம் குற்றவாளி ஜுட் மஹாவின் கையில் விலங்கைப் பூட்டினார் ஷானி.
பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் சியாம் படுகொலையில் டீ.ஐ.ஜீ வாஸ் குணவர்த்தனவை உள்ளே தள்ளிய பெருமையும் ஷானியையே சேரும்.
சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை,பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை,உடத்தலவின்ன முஸ்லிம் இளைஞர்கள் கொலை,பாரத லக்ஸ்மன் கொலை,பதினொரு மாணவர்கள் கொலை, வசீம் தாஜுதீன் கொலை,குடி தண்ணீர் கேட்டுப் போராடிய ரத்துபஸ்வல மக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் முன்னணி பின்னணி , ஊடகவியலாளர்களான போத்தல ஜயந்த மற்றும் கீத் நொயார் போன்றோரின் மீதான தாக்குதல்கள் என்று இலங்கையை ஒரு நவீன பாதாள தேசமாக்கிய அத்தனை குற்றங்களின் பைல்களும் ஷானி திறந்தவைதான்.
நல்லாட்சி என்ற பெயரில் நடந்த கோமாளி ஆட்சி ஷானியோடு சரியாய் ஒத்துழைக்கவில்லை. அதிகாரத்திலிருந்தவர்கள் டீலர்களாய் இருந்ததால் விசாரணைகளும்,கைதுகளும் நகைச்சுவையாகிப் போயின.
கோட்டாபய ராஜபக்சே ஜனாதிபதியானதும் பிரதமரை நியமிக்க முதல் உடனடியாய்ச் செய்த முதல் வேலை ஷானியைத் தூக்கி காலி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்ததுதான்.கெத்தாய், மிடுக்காய் இருந்த ஷானி, கடிதம் பிரிக்கும் ஒரு பியோன் தரத்திற்கு தூக்கியடிக்கப்பட்டார்.அத்தோடு உயிர்த்த ஞாயிறு விசாரணையின் போக்கு மொத்தமாய்த் திசைமாறியது.
வாஸ் குணவர்தனவின் கேஸை மையமாய் வைத்து சேவை இடைநிறுத்தம், மூன்று வருடம் ஆறு மாதம் ஓய்வூதியம் இடைநிறுத்தம், பத்து மாதச் சிறை என்று ஷானி மீது பழிவாங்கல்கள் தொடர்ந்தன.
வெறும் ஒரே ஒரு அறை கொண்ட ஐந்நூற்றி ஐம்பது சதுர அடி வீட்டில் தான் இன்னமும் வசிக்கிறார் ஷானி.சந்திரிக்கா முதல் கோட்டாபய வரை அவர் எந்தவொரு தலைவருடனும் சமரசம் செய்து கொண்டதில்லை.அப்படி அவர் சமரசம் செய்து இருந்தால் இலங்கை போன்ற ஒரு பாடவதி சிஸ்டம் கொண்ட தேசத்தில் பில்லியன்களில் உழைத்து இருக்கலாம்.
இது மீண்டும் ஷானியின் முறை.இத்தனை வருட கால அரசியல் தலையிடிகள் அவருக்கு இனி இருக்காது.எந்த ராஜபக்சேக்களால் ஷானி பழிவாங்கப்பட்டாரோ அந்த ராஜபக்சேக்கள் சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல் ஒன்றில் போட்டியிட முடியாதவளவுக்கு ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் நிலையில் ஷானி வேலையை ஆரம்பித்து இருக்கிறார்.என்னவொரு பவர் புல் கர்ம வினை இது.