நேற்று சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர் !
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் நேற்று (18) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில், IMF தூதுக்குழு தலைவர் பீட்டர் ப்ரூவர் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் புதிய அமைச்சர்களை சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது, ஜனாதிபதி திசாநாயக்க, இலங்கையின் பொருளாதார மீட்சி முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியுடன் ஒத்துழைப்பை தொடர்வதற்கான தமது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். அவர் குறிப்பிட்டதாவது
“பொதுமக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதில் IMF வேலைத்திட்டத்தின் வெற்றியினால் முக்கிய பங்கு உள்ளதாகவும், புதிய அரசாங்கம் மக்கள் ஆணையை மதித்து முழுமையாகச் செயற்படுவதாகவும் உறுதியளிக்கிறோம்.”
IMF குழுவினர் ஜனாதிபதிக்கும் அவரது அணியினருக்கும் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், புதிய அரசாங்கத்துடன் எளிதான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டனர். மேலும்,சமூக சேவைகளுக்கான ஒதுக்கீடுகள் கடந்த காலங்களில் முழுமையாகப் பயன்படுத்தப்படாததையும்,வளங்களை திறம்பட பாவிப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை அமுல்படுத்த வேண்டும் என்பதையும் தெரிவித்தனர்.
ஜனாதிபதி திசாநாயக்க, சிறுவர் வறுமை, போசாக்கின்மை, மற்றும் சமூக சேவைகள் போன்ற அடிப்படை பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தனது உறுதியை வலியுறுத்தினார்.
ஆட்சியில் வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க தமது அரசாங்கம் கடுமையான ஒழுங்குவிதிகளைப் பின்பற்றும் எனவும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் நிதியமைச்சின் பிரதிநிதிகள், தொழில் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இசந்திப்பு, இலங்கை-IMF ஒத்துழைப்பை உறுதிப்படுத்துவதற்கான அடித்தளத்தை அமைப்பதோடு, நாட்டின் நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மை நோக்கி நகர்வதற்கான வழிகாட்டுதலையும் வழங்கியது.