பருத்தித்துறை நகரசபை தலைவராக நவரட்னராஜா தெரிவு
(LBC Tamil) பருத்தித்துறை நகரசபையின் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் வே.நவரட்னராஜா இன்று தெரிவு செய்யப்பட்டார்.
பருத்தித்துறை நகர சபையின் அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இரண்டு தடவைகள் தோல்வியடைந்த நிலையில், கடந்த 19 ஆம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த நகரசபை தலைவர் யோ.இருதயராஜா இராஜினாமா செய்திருந்தார்.
இந்த நிலையில், புதிய நகரசபை தலைவரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வே.நவரட்னராஜாவின் பெயர் முன்மொழியப்பட்டதுடன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் க.பாலசுப்ரமணியத்தின் பெயர் முன்மொழியப்பட்டது.
15 பேர் கொண்ட சபையில் வே.நவரட்னராஜாவிற்கு ஆதரவாக 8 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், க.பாலசுப்ரமணியத்திற்கு ஆதரவாக 6 வாக்குகள் அளிக்கப்பட்டன.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் சபை அமர்வில் பங்குபற்றியிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.