புனர்வாழ்வு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை
(LBC Tamil) புனர்வாழ்வு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.
எதிர்வரும் 19 ஆம் திகதி புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே நபர்கள் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.
குறித்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபரும் தாமாக முன்வந்து புனர்வாழ்வு நிலையத்திற்கு செல்ல முடியும் என நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன குறிப்பிட்டார்.
புனர்வாழ்வு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், கம்பளையில் புதிதாக புனர்வாழ்வு மையம் ஒன்றும் ஸ்தாபிக்கப்படவுள்ளது.
தற்போது புனர்வாழ்வு மையங்களில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களே அதிகமாக காணப்படுவதால், எதிர்வரும் காலங்களில் அதிகாரிகளின் அனுமதியின்றி வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அத்துடன், குறித்த நபர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டிருப்பின், மருத்துவ சிகிச்சைகளுடன் தொழில்சார் பயிற்சிகளையும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன சுட்டிக்காட்டினார்.