முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையின் மனைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொடை நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (22) உத்தரவிட்டுள்ளது.
லொஹான் ரத்வத்தையின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தைக்குச் சொந்தமான நுகேகொடை, மிரிஹான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்று ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி மிரிஹான பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்தது.
இதனையடுத்து, பொலிஸாரால் முற்கொள்ளப்பட்ட விசாரணையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையும் அவரது மனைவி ஷஷி பிரபா ரத்வத்தையும் கைது செய்யப்பட்டு நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லொஹான் ரத்வத்தை மற்றும் அவரது மனைவி ஷஷி பிரபா ரத்வத்தை ஆகியோரை பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது லொஹான் ரத்வத்தையை டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி வரையும் ஷஷி பிரபா ரத்வத்தையை நவம்பர் மாதம் 22 ஆம் திகதி வரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.