யாழில் வீடுகளுக்குள் நள்ளிரவில் புகுந்து இராணுவத்தினர் தாக்குதல்!
யாழ்ப்பாணத்தின் பொன்னாலை மேற்கு பகுதியில் உள்ள மக்களது வீடுகளுக்குள் நள்ளிரவு வேளையில் புகுந்த இராணுவத்தினர் மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடாத்தியதோடு மக்களை அச்சுறுத்தியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பட்டா வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றில் வந்திறங்கிய படையினர் வீதியில் எரிந்த மின்குமிழ்களை அணைத்துவிட்டு மக்களை மோசமாக அச்சுறுத்தியுள்ளனர்.
அத்தோடு வீடுகளுக்குள் புகுந்து தேடுதல்களை நடத்தியதோடு இளைஞர்களை துரத்தி துரத்தி தாக்குதலும் நடத்தியுள்ளனர். படையினரது மூர்க்கத்தனமான செயற்பாட்டால் அச்சமடைந்த இளைஞர்கள் ஊரைவிட்டு தப்பி ஓடினர்.
பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி வயல்களுக்குள் தஞ்சம் அடைந்தனர். சிலமணிநேரம் அங்கு பதட்டமான சூழல் நிலவியது.
இதனை அடுத்து, அந்த பகுதி பிரதேச உறுப்பினருக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பிரதேசசபை உறுப்பினர் படையினரது செயற்பாடுகள் குறித்து படையினருடன் வாய்தர்க்கத்தில் ஈடுபட்டார்.
அத்தோடு பொலிஸாருக்கு அழைப்பு எடுத்து சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்தபோது பொலிஸார் வந்தால் சிக்கல்நிலை உருவாகும் என உணர்ந்த இராணுவத்தினர் உடனடியாகவே அங்கிருந்து வெளியேறினர்.
பொன்னாலை வரதராஜபெருமாள் ஆலயத்திற்கு அருகே தயாராக நின்ற வாகனத்திற்கு ஓடிச்சென்ற படையினர் வாகனத்தில் ஏறி தப்பிசென்றனர்.
இச்சம்பவம் குறித்து நள்ளிரவு 11.55 மணியளவில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவித்த நிலையிலும்ன் சம்பவ இடத்திற்கு பொலிசார் வரவில்லை. இதன்பின் 119இற்கு அறிவித்ததை அடுத்து அதிகாலை 2.00 மணிக்கு வந்து விசாரணைகளை நடாத்தியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.