ராமர் பாலம் வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கு கூடுதல் கால அவகாசம்
(LBC Tamil) ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரி சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கில், பதிலளிக்க மத்திய அரசுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கி இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேது சமுத்திர திட்டத்தினால் ராமர் பாலம் சிதைந்து போகும் அபாயம் உள்ளதால் அந்த திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டுமென பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் ராமர் பாலத்திற்கு எவ்வித சேதமும் இல்லாத வகையில், சேது சமுத்திரத் திட்டம் மத்திய அரசினால் செயல்படுத்தப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், 2015 ஆம் ஆண்டு ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரி சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ராமர் பாலத்தை நினைவுச் சின்னமாக அறிவிக்கும் பட்சத்தில், சேது சமுத்திர திட்டத்திற்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்வதாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராமர் பாலத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு கடந்த 2018 ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
மத்திய அரசினால் தொடர்ந்தும் காலம் தாழ்த்தப்பட்டு வந்த நிலையில், மீண்டும் அது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பில் விவாதிக்கப்பட்டு வருவதால், இன்னும் இது குறித்து முடிவெடுக்கப்படவில்லை எனவும் இந்த வழக்கை பெப்ரவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டுமெனவும் மத்திய அரசு சார்பில் ஆஜரான சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனை ஏற்க மறுத்த இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, இந்த மனுவிற்கு பெப்ரவரி முதல் வாரத்திற்குள் மத்திய அரசு பதில் அளிக்க கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கின் விசாரணையை பெப்ரவரி இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.