வேலணையில் நவீன இறால் பண்ணை!
நீர் வேளாண்மையில் பரிமாண வளர்ச்சி, நலிவுற்ற மக்களின் மீள் எழுச்சி’ திட்டத்தின் கீழ் வேலணை கிராமத்தில் அன்னை குழுமத்தால் முன்னெடுக்கப்படும் நவீன இறால் வளர்ப்பு பண்ணையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று ஆரம்பித்து வைத்துள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்திற்கு அமைய வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பண்ணை வளர்ப்பு திட்டங்களில் ஒன்றாக இத்திட்டமும் அமைகிறது
இது குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கையில்,
அன்னை குழுமத்தால் ஆரம்பிக்கப்படும் இந்த நவீன இறால் பண்ணை இப்பகுதியின் வளர்ச்சிக்கும் மக்களது எதிர்பார்ப்புக்கும் ஏற்றவகையில் வேலணை பிரதேசத்தின் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புகளை வழங்குவதோடு வருமானத்தின் ஒரு பகுதியை இப்பிரதேசத்திற்காக பயன்படுத்த குறித்த நிறுவனம் உறுதியளித்துள்ளது.
அத்துடன் மக்களினதும் பிரதேசங்களினதும் நலன்களை முன்னிறுத்தி நான் முன்னெடுக்கும் முயற்சிகள் அனைத்துக்கும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் எப்பொழுதும் முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குகிறார்கள்.
அதற்காக அவர்களுக்கு எனது மக்கள் சார்பாக நன்றியினை தெரிவிக்கிறேன்.
அதேநேரம் இப்பிரதேசத்தின் பலரது ஒத்துழைப்புகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த அபிவிருத்தி திட்டத்தை குறித்த நிறுவனம் தனக்குள்ள அனுபவத்தையும் பொருளாதார வளத்தையும் கொண்டு சிறப்பாக முன்னெடுக்கும் என்றும் நான் நம்புகிறேன்.
இதனிடையே மற்றுமொரு நிகழ்வாக Ocean aqua farm நிறுவனத்தினால் வேலணை கிராமத்தில் உருவாக்கப்படவுள்ள நண்டு வளர்ப்பு பண்ணைக்கான வேலைகளையும் இன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்திருந்தார்.
‘நீர் வேளாண்மையில் பரிமாண வளர்ச்சி – நலிவுற்ற மக்களின் மீளெர்ச்சி’ எனும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத் திட்டத்திற்கு அமைவாக வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்களுடன் தனியார் நிறுவனத்தினால் நண்டு பண்ணை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.