மின் கட்டண திருத்தத்திற்கு அனுமதி கிடைக்குமென எரிசக்தி அமைச்சு நம்பிக்கை
(LBC Tamil) மின் கட்டண திருத்தம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு நாளை(09) அமைச்சரவை அனுமதி கிடைக்கும் என நம்புவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட இந்த யோசனை தொடர்பில் அமைச்சர்களின் கருத்துகளைப் பெறும் நோக்கில் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த கருத்துகளை நாளை(09) ஆராய்ந்ததன் பின்னர், மின் கட்டணத் திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்பார்க்கப்படும் வகையில் மின் கட்டணத்தை அதிகரிக்க வாய்ப்பு கிடைக்கும் பட்சத்திலும் நிலக்கரி மற்றும் எரிபொருள் மின் உற்பத்தி நிலையங்களுக்கான மூலப்பொருட்கள் கிடைக்கும் பட்சத்திலும் எதிர்வரும் காலங்களில் மின் துண்டிப்பின்றி தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என எதிர்பார்ப்பதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கட்டணத் திருத்தம் தொடர்பான அறிவுறுத்தல்களை அமைச்சரவைக்கு அனுப்பி வைத்துள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.