முஸ்லிம் கட்சிகள் கூட்டணியாக வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்: ஹசன் அலி அறிக்கை
(LBC Tamil) எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டணியாக வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் ஹசன் அலி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு உள்ளூராட்சி பிரதேசங்களிலும் உள்ள சமூக நலன் பேணும் அமைப்புகள், அரசியல்வாதிகள், புத்திஜீவிகள், உலமாக்கள், இளைஞர்கள் இணைந்து இந்த மாற்றத்திற்கான பாதையை வடிவமைக்க வேண்டும் என ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலங்களில் ஊடுருவும் சமூக விரோத சக்திகளின் தொல்லைகளிலிருந்து தமது பிரதேசம் காப்பாற்றப்படும் என ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெரும் தேசிய அரசியலில் பங்காளிகளாக இருந்து அரசாங்கங்களை பலப்படுத்துவதற்கும் காப்பாற்றுவதற்கும் பேரம்பேசும் சக்தியை காவு கொடுத்து ஏமாந்த வரலாறு இனி புதைக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தேர்தலில் ஊழலற்ற, நேர்மையான வேட்பாளர்களை ஊர் கூடி ஒற்றுமையாக களமிறக்கி துணிவான செய்தியை வருங்கால சந்ததியினருக்கு சொல்ல முன்வருமாறு ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் ஹசன் அலி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.