பாராளுமன்ற முதல் நாளில் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்த வைத்தியர் அருச்சுனா
யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி அருச்சுனா இராமநாதன் புதிய பாராளுமன்றத்தின் முதல் நாளில் பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து தலைப்புச் செய்தியாக இடம்பிடித்தார்.
வைத்தியர் அருச்சுனா இராமநாதன் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் சாவகச்சேரி மருத்துவமனையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி மக்கள் மத்தியில் பிரபல்யமானார். பின்னர் 2024 பொதுத் தேர்தலில் யாழ் தேர்தல் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இலங்கையின் 10வது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில், ஆசன ஏற்பாடுகள் எவையும் செய்யப்படாத நிலையில், எவரும் எங்கும் அமரலாம் என கூறப்பட்டது.
இந்நிலையில் அருச்சுனா அமந்த போது பாராளுமன்ற ஊழியர் ஒருவர் இது எதிர்கட்சி தலைவருக்கான ஆசனம் எனவே வேறு ஒரு ஆசனத்தில் அமருமாறு கூறியுள்ளார்.
பாராளுமன்ற ஊழியருக்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன், புதிய பாராளுமன்றத்தின் முதல் நாளில் ஆசன ஏற்பாடுகள் எதுவும் இல்லை என்பதை சுட்டிக்காட்டியதுடன், “நாங்கள் நாடாளுமன்ற மரபை மாற்றியுள்ளோம்” எனக் கூறி, இருக்கையில் இருந்து நகர மறுத்தார்.