மன்னார் நறுவிலிக்குளம் பகுதியில் பல கோடி ரூபாய் பெறுமதியான 906 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்பு

முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் இருந்து பல கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் இன்று புதன்கிழமை (03) காலை கைப்பற்றப்பட்டது.
மன்னார் பொலிஸ் விசேட பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், முருங்கன் பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து நடத்திய விசேட தேடுதலின் போதே இந்த பொதிகள் மீட்கப்பட்டன.
25 மூட்டைகளில் 398 சிறிய பொதிகளாகப் பொதி செய்யப்பட்டிருந்த கேரள கஞ்சாவின் மொத்த எடை 906 கிலோ கிராம் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா முருங்கன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில், மன்னார்–வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் சாமந்த விஜய சேகர இன்று (03) முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கு விஜயம் செய்து கைப்பற்றப்பட்ட பொதிகளை பார்வையிட்டதோடு, பொலிஸார் மற்றும் கடற்படையினருடன் கலந்துரையாடினார்.