மனித குலத்தின் மீட்சிக்கான மாற்றங்கள் தமிழர் தேசத்திலும் நடந்தே தீரவேண்டும் – நத்தார் வாழ்த்து செய்தியில் டக்ளஸ்

அன்பும், ஒளியுமாய் கருணை மைந்தன் இயேசு பிரான் அவதரித்த நத்தார் தினத்தில், எல்லோர் இடங்களிலும் நித்திய ஒளி உண்டாக வழி பிறக்கட்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது நத்தார் தின வாழ்த்துச் செய்தியில்  தெரிவித்துள்ளார்,

மேலும் அந்த வாழ்த்துச்செய்தியில், –

எமது தேசம் எமக்கென்று வாக்களிக்கப்பட்ட பூமி! அவலங்கள் சூழ்ந்த அந்தகார இருள் வெளியில் இருந்து எமது மக்களை மீட்கவே நாமும் வரவழைக்கப்பட்டவர்கள்,..

மனித குலத்தின் மீட்சிக்கான மாற்றங்கள் எங்கெல்லாம் நடந்தனவோ  அந்த மீட்சியும், மாற்றமும் எம் தமிழர் தேசத்திலும் நடந்தே தீரவேண்டும்.

ஏழ்மையும் வறுமையும் அகன்று எழிலார்ந்த உரிமை வாழ்வை சகல மக்களும் சரி நிகர் சமனாக கொண்டாடி மகிழ வேண்டும்.

இல்லையென ஏங்கும் மக்களின் பெரு மூச்சு இல்லாத,. அவலங்களின் அழுகுகுரல் கேட்காத அழகார்ந்த வாழ்வை எமது மக்கள் அனுபவிக்க வேண்டும்,…

எமது நிலங்கள் எமக்கே சொந்தமென்று கொண்டாடும் உரிமம் எமக்கு வேண்டும்,..எவரும் எவரையும் அடிமை என்று கொள்ளாத நீதிச்சட்டங்கள்

நடைமுறையாக்கப்பட வேண்டும், துயரங்களை தொடர்ந்தும் தருவிக்க எத்தனிக்கும் துன்மார்க்க  அரசியல் மேய்ப்பர்களின் சூழ்சிகள் யாவும் சூழ்ந்துவரும் புயலைப்போல் கடந்து போகும்,..

நீதிமான்களுக்குரிய எமது நம்பிக்கையின்  உறுதி மொழிகளும், தீர்க்க தரிசனங்களும் எமது மக்களின் வாழ்விடங்கள் தோறும் நித்திய ஒளியாக வீசும்,…

அதற்காகவே,  நீங்கள் வருத்தப்பட்டு அவலங்களை சுமந்த வேளையிலும்  உங்களுடனேயே நாமும் வாழ்ந்து வருகின்றோம்,..

கற்பனைக்கே எட்டாத தூரத்தில் இருப்பவைகள் வெறும் கற்பாறைகளே,..கைக்கு கிடைத்திருக்கும் நடை முறை யதார்த்தங்களே பசுந்தரைகள்.

கடந்த காலங்களில் கற்பாறைகளில் விதைக்க எத்தனித்து தோற்றுப்போய் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது மக்களை ஏதிலிகளாக நடுத்தெருவில் அலைய விட்ட கசப்பான அனுபவங்களில் இருந்து கற்றுக்கொண்டு,..

யதார்த்தங்களை உணர்ந்து பசுந்தரைகளில் விதைக்க சகலரும் விழித்தெழுந்தால் எமது தேசம் மீண்டெழும் காலம் தூரத்தில் இருக்காது,..

பதின் மூன்றாவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்துவதில் இருந்து தொடங்கும் சாத்தியமான வழி நோக்கி சகலரும் ஒன்று பட்டு உழைத்தால்

இனி வரும் காலம் நல்ல கனிதரும் காலமாக மாறும்,..சமாதானத்தையும், சமூக நீதியையும், சமத்துவ தேசத்தையும் விரோதிப்பவர்கள் எமது மக்களின் பெயரால் சாத்தான்கள் போல் வேதம் ஓதுவார்கள்,..

அர்த்தமற்ற உணர்ச்சிக்கோசங்களால் அரசியல் போதையூட்டும் அவர்கள் போதைகளுக்கு அடிமையாகும் சமூகச்சீரழிவுகளையும் விரும்புவார்கள்.

அதைச்சொல்லியே அரசியலும் நடத்துவார்கள்.  ஆகவே விழித்தெழுங்கள்!,..சாத்தியமான வழிமுறையில் தேடுங்கள்,..

தீர்வுகளை கண்டடைவீர்கள். சகல சமூக அவலங்களும் தீர்ந்து போகட்டும்,..அரசியல் சமூக பொருளாதார சமத்துவ நீதி ஓங்கட்டும்…

தமிழ் பேசும் மக்களின் வாழ்விடங்கள் தோறும் நித்திய ஒளி உண்டாக தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்போம்.

அனைவருக்கும் நத்தார் தின வாழ்த்துக்கள் இவ்வாறு தனது நத்தார் தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.