ஸ்டப்ஸின் துடுப்பாட்ட உதவியுடன் தென் ஆபிரிக்கா வெற்றி
கெபெத்தா, சென் ஜோர்ஜ் பார்க் விளையாட்டரங்கில் இந்தியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையிலான இரண்டாவது சர்வதேச ரி20 போட்டி மிகவும் சுவாரஸ்யமாக முடிந்தது. இந்தியா நிர்ணயித்த 124 ஓட்டங்களை அடைவதற்காக களம் இறங்கிய தென் ஆபிரிக்கா கடுமையான போராட்டத்துக்கு மத்தியில் ஒரு ஓவர் மீதமிருக்க 7 விக்கெட்கள் இழந்து 128 ஓட்டங்கள் எடுத்து வெற்றிபெற்றது.
அந்த வெற்றியுடன் 4 போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு அணிகளும் 1 – 1 என சமமாக உள்ளன.
தொடக்க வீரர் ரெயான் ரிக்ல்டனின் விக்கெட்டை இந்திய பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் வீழ்த்திய பின்னர், வருண் சக்கரவர்த்தி தனது சிறப்பான பந்துவீச்சால் தென் ஆபிரிக்காவின் 5 விக்கெட்களை வீழ்த்தி அதிரடியாக தாக்கினார். 13ஆவது ஓவரின் முடிவில் தென் ஆபிரிக்கா 6 விக்கெட்களை இழந்து 66 ஓட்டங்களில் திணறியது. ரவி பிஷ்னோய் 16ஆவது ஓவரில் அண்டைல் சிமிலேனின் விக்கெட்டை வீழ்த்தியதும், தென் ஆபிரிக்கா 86 ஓட்டங்களில் 7 விக்கெட்களை இழந்த நிலையில் இருந்தது.
அதற்கு பிறகு, ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் ஜெரால்ட் கொயெட்ஸி அணியின் பின்புறத்தை வலுவாக்கினர். ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 47 ஓட்டங்களும், ஜெரால்ட் கொயெட்ஸி 19 ஓட்டங்களும் எடுத்து வெற்றியை உறுதிசெய்தனர்.
இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 124 ஓட்டங்களை மட்டுமே சேர்த்தது. முதன்மை வீரர்களான சஞ்சு செம்சன், சூரியகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பாக ஆடத் தவறிய நிலையில், ஹார்திக் பாண்டியா 39 ஓட்டங்களுடனும் அக்சார் பட்டேல் 27 ஓட்டங்களுடனும் இந்தியாவின் ஸ்கோர் கார்டை முன்னேற்றினர்.
தென் ஆபிரிக்கா பந்துவீச்சில் மார்க்கோ ஜென்சன், ஜெரால்ட் கோயெட்ஸி, அண்டைல் சிமிலேன், ஏய்டன் மார்க்ராம், நிக்கபாயோம்ஸி பீட்டர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் 17 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தி தனது சர்வதேச ரி20 பந்துவீச்சில் அதிசிறந்த சாதனையை பதிவு செய்தார்.