அஜர்பைஜானில் இடம்பெறும் ஐநாவின் காலநிலை மாநாட்டுக்கு எதிர்ப்பு
அஜர்பைஜானின் தலைநகரான பக்கு நகரில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலநிலை மாற்ற மாநாடு நவம்பர் 11 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் 200 நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், காலநிலை மாற்ற அறிவியலாளர்கள், விஞ்ஞானிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் பல்வேறு துறை வல்லுநர்கள் பங்கேற்கின்றனர்.
ஆனால், இந்த மாநாட்டை நடத்துவதற்கு அஜர்பைஜானுக்கு தகுதியில்லை என சுட்டிக்காட்டி, ஸ்வீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும், உலகளாவிய பிரபலங்களின் கவனத்தை ஈர்த்தவளுமான கிரேட்டா தன்பெர்க் கண்டனம் தெரிவித்தார். அவர் ஜார்ஜியாவின் தலைநகரான திபிலீசியில் நடைபெற்ற பேரணியில் நேரடியாக கலந்து கொண்டார். இந்த போராட்டத்தின் மூலம் அஜர்பைஜானின் மீது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார்.
கிரேட்டா தன்பெர்க் கூறியதாவது, “அஜர்பைஜான் ஒரு அடக்குமுறை, ஆக்கிரமிப்பு அரசு. இது இனச் சுத்திகரிப்பு மற்றும் அடக்குமுறைகளைப் பின்பற்றுகிறது. இந்த காலநிலை மாற்ற மாநாட்டை நடத்துவதன் மூலம் அஜர்பைஜான் தனது மனித உரிமை மீறல்களை மறைக்க முயல்கிறது. இதுபோன்ற ஒரு அரசுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க இயலாது” என்றார்.
அஜர்பைஜானின் தலைவர் இல்ஹாம் அலியேவ் 2003 முதல் பதவியில் இருந்து வருகிறார். தந்தையின் மரணத்திற்குப் பிறகு அவர் அதிகாரத்தைத் தக்கவைத்து, நாடின் அரசியல் மற்றும் நிர்வாகத்தை நடத்தி வருகிறார்.
திபிலீசியில் கிரேட்டாவிற்கு ஆதரவாக பலர் பேரணியில் ஈடுபட்டனர். அவர்கள் அஜர்பைஜானுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி, கண்டன முழக்கங்களை எழுப்பினர்.