வடக்கு, கிழக்கின் கல்வி-சுகாதார மேம்பாட்டில் உலக வங்கி அவதானம்!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் உலக வங்கி தலைவர் அஜே பங்கா இடையிலான கலந்துரையாடல் நேற்று (27) இணையம் வழியாக நடைபெற்றது. இதில் புதிய தொழில் வாய்ப்புகள், சுகாதாரம், சமூக பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளில் இலங்கைக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு வழங்குவது குறித்து உலக வங்கி உறுதிப்படுத்தியது.
விவசாயம், நீர் முகாமைத்துவம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, டிஜிட்டல் பரிமாற்றம் போன்ற துறைகளில் எதிர்கால ஒத்துழைப்புகள் பேசப்பட்டன.
ஜனாதிபதி, கிராமிய வறுமை ஒழிப்பு, கல்வி மற்றும் தொழில் கல்வி மேம்பாடு, மற்றும் வடக்கு-கிழக்கு பகுதிகளில் பொருளாதார முன்னேற்றத்திற்கான முக்கிய திட்டங்களை விவரித்தார்.
உலக வங்கியின் புதிய தெற்காசிய கூட்டு அலுவலகங்களின் ஆதரவு நாடாக இலங்கை தெரிவுசெய்யப்பட்டிருப்பதும், அதன் மூலம் பன்முக அபிவிருத்தி பணிகள் முன்னேற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.