நீதவானுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டுமென லஞ்சம் வாங்கிய கான்ஸ்டபிள் கைது
மனிதப் படுகொலை குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட மூவரின் பிணைக்கு உதவுவதற்கு, நீதவானிற்கு பணம் கொடுக்க வேண்டும் என கூறி பெண்கள் மூவரிடமிருந்து 60 ஆயிரம் ரூபாயை பெற்ற குற்றச்சாட்டில், நீதவானின் பொலிஸ் பாதுகாப்பு கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கான்ஸ்டபிள், மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் இணைந்து கடமையாற்றி வந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்ட மூவருக்கும் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கூறிய திகதியில், நீதிமன்ற பிணை வழங்கப்படாத நிலையில், இதனை உறுதிப்படுத்துவதற்காக நீதவானிடம் குறித்த பெண்கள் வினவிய போது, தங்களிடமிருந்து 60 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்ட விடையத்தை தெரிவித்துள்ளனர்.
இதனிடையில், நீதவான் வழங்கிய அறிவுறுத்தலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின், குறித்த கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டதாகவும், இந்த வழக்கில் லஞ்சம் வழங்கிய மூன்று பெண்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், லஞ்ச ஒழிப்பு தொடர்பான புகாரை மேலதிக விசாரணைகளுக்காக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாரத்துதலைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.