யாழில் கீழே கிடந்த தங்க நகையை ஒப்படைத்தவரை கட்டிவைத்து தாக்கிய குழு

யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியிலுள்ள வெதுப்பகத்தில் உணவு வாங்க வந்த கூலித் தொழிலாளி நிலத்தில் விழுந்துகிடந்த தங்க ஆபரணத்தை எடுத்து வெதுப்பகத்தில் வழங்கிய நிலையில், குறித்த கூலி தொழிலாளியை இளைஞர் குழு ஒன்று கட்டிவைத்து தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் தெரிவிக்கையில்,

உரும்பிராயில் உள்ள வெதுப்பகம் ஒன்றுக்கு சென்ற நிலையில் நிலத்தில் தங்க நகை போன்ற ஆபரணம் இருப்பதை அவதானித்தேன்.

அதனை குறித்த வெதுப்பகத்தில் ஒப்படைத்ததுடன், அது தங்க ஆபரணமா என ஆராய்ந்து உரியவர்களிடம் ஒப்படையுங்கள் என கடந்த 24ஆம் திகதி வழங்கினேன்.

இரண்டு நாட்கள் கடந்த நிலையில், குறித்த வீதியில் செல்லும்போது வெதுப்பகத்திற்கு சென்று நான் வழங்கிய ஆபரணத்தை உரியவரிடம் ஒப்படைத்தீர்களா என கேட்டேன். அதற்கு அவர்கள் இன்னும் உரியவர்களிடம் ஒப்படைக்கவில்லை என கூறினர்.

மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து குறித்த வெதுப்பகத்துக்கு சென்ற நிலையில், அந்தப் பொருளை உரியவர்களிடம் ஒப்படைத்தீர்களா என கேட்டபோது ஒப்படைக்கவில்லை என பதில் வழங்கினர்.

இந்நிலையில் குறித்த பொருளைத் தாருங்கள், ஏதாவது சிறுவர் இல்லத்திற்கு அதை வழங்கி வைப்போம் என கேட்டேன்.

இதன்போது குறித்த வெதுப்பகத்தில் நின்ற இருவர் என் கழுத்தைப் பிடித்து தாக்கினர்.

நான் சொல்வதை கேளுங்கள், ஏன் தாக்குகிறீர்கள் என கத்தினேன், ஐந்துக்கு மேற்பட்டவர்கள் என்னை கம்பத்தில் கட்டிவைத்து தாறுமாறாக தாக்கினர்.

வீதியால் சென்ற சிலர் என்னை தாக்குவதை அவதானித்த நிலையில், எனது நியாயத்தை கேட்டு என்னை மீட்டனர்.

முகத்திலும் உடலிலும் அடி காயங்களுக்குள்ளாகிய நான் கோப்பாய் பொலிஸாருக்கு சம்பவம் தொடர்பில் தெரிவித்து விட்டு, வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டியில் சென்றுவிட்டேன்.

வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியபின் கோப்பாய் பொலிஸ் நிலையம் சென்றேன். என்னை தாக்கியவர்களை பொலிஸார் கைது செய்யவில்லை. பொலிஸ் நிலையம் வந்த சட்டத்தரணி ஒருவர் சமாதானமாக செல்லுங்கள். என்றார்.

எனக்கு நியாயம் வேண்டும், என்னை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும், இல்லாவிட்டால் உயிர் மாய்ப்பேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.