தமிழ் பொது வேட்பாளரை களமிறங்கும் எண்ணத்தில் உடன்படிக்கை கைச்சாத்து
ஐனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான உடன்படிக்கை இன்று திங்கட்கிழமை கைச்சாத்திடபட்டது.
தமிழ் சிவில் சமூகத்திற்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கு இடையிலும் இந்த உடன்படிக்கை யாழ்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் மதியம் 12.12 க்கு கைச்சாத்திடப்பட்டது.
கடந்தகால ஜனாதிபதி தேர்தல்களில் தமிழ் மக்கள் வாக்களித்தும் எந்தவித பயனும் இல்லை என தமிழ் கட்சிகளும் சிவில் சமூகத்தினரும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
இதனால் தமிழ் மக்களின் நிலைமையையும் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தேவைகளை வெளிப்படுத்தும் வகையில் எதிர்வரும் ஐனாதிபதி தேர்தலில் எந்தவொரு சிங்கள வேட்பாளருக்கும் ஆதரவை வழங்காது தமிழர் தரப்பில் இருந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் அண்மைக் காலமாக சிவில் சமூகத்தினராலும் அரசியல் கட்சிகளாலும் தெடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த்து.
இந்நிலையில் இரு தரப்பினர்களுக்கு இடையிலும் பல்வேறு விடயங்களை உள்ளடக்கி ஒப்பந்தம் கைச்சாத்தாகியதைத் தொடர்ந்து பொது வேட்பாளர் தெரிவு உள்ளிட்ட ஏனைய அனைத்து விடயங்கள் தொடர்பிலும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த உடன்படிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தான் ஆகியோரும் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், பொ. ஐங்கரநேசன், சட்டத்தரணி ஶ்ரீகாந்தா, ஜனநாயக போராளிகள் சார்பில் சி.வேந்தன் உள்ளிட்ட அரசியல்வாதிகளும், அரசறிவியல்துறை பேராசிரியர் கே.ரி கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி அ.யோதிலிங்கம், அரசியல் விமர்சகர் யதீந்திரா மற்றும் அரசியல் விமர்சகர் நிலாந்தன் உள்ளிட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் கையொப்பம் இட்டனர்.