குற்ற ஒப்புதலை வைத்து நீதிமன்று தீர்ப்பு வழங்க கூடாது – விக்கி பாய்ச்சல்
பொலிசாரினால் தமிழ் அரசியல் கைதிகளுக்கு வழங்கப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தினை அடிப்படையாக வைத்து நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குவதை ஏற்கமுடியாதென நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களுடன் மெய்நிகர் வழியாக ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசியல் கைதிகள் விடயத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் பாதகமான ஒரு சட்டமாக இருக்கின்றமையால் அதை நீக்க வேண்டும் என்பது பலரின் நிலைப்பாடு.
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்படுபவருக்கு பொலிசாரினால் நீதிமன்றத்திற்கு வழங்கப்படும் குற்றஒப்புதல் வாக்குமூலத்தை வைத்து தீர்ப்புகள் வழங்கப்படுகிறது.
நான் நீதியரசராக இருந்தபோது குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்க முடியாது என தீர்ப்பு வழங்கினேன்.
ஒருவர் தான் செய்தது குற்றமென குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கினாலும் அந்த குற்றத்தினை அவர் செய்தாரா என்பது குறித்து நீதிமன்றம் ஆராயும் கடமை உள்ளது.
பயங்கரவாத தடை சட்டத்தில் உள்ள சரத்துக்கள் அதன் கீழ் கைது செய்யப்படுபவரை நீண்ட காலமாக தொடர்ச்சியாக தடுத்து வைத்து விசாரிக்க இடம் அளிக்கிறது.
சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனேகமானவர்கள் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குகள் இடம்பெற்று வரும் நிலையில் வழக்குகள் நிறைவுறும் சந்தர்ப்பங்களில் புதிய குற்ற ஒப்புதல் வாக்கு மூலங்களை வைத்து அவர்களை தொடர்ந்து தடுத்து வைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறியமுடிகிறது.
எனவே பயங்கரவாத தடை சட்டத்தில் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்படுவதற்கு சட்ட ஏற்பாடுகள் இருப்பினும் அதனை வியாக்கியானம் செய்ய நீதிபதிகளுக்கு உரித்து உள்ளதென தெரிவித்தார்.