பெண் ஒருவரை தடுத்து வைத்து வன்புணர்ந்த இரு பொலிசாருக்கு நேர்ந்த கதி
பெண்ணொருவரை பலந்தமாக தடுத்து வைத்து, வன்புணர்வுக்கு உட்படுத்திய புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு தலா 10 வருட கடூழிய சிறைத் தண்டனையும், தலா 15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
2015ம் ஆண்டு, பெண் ஒருவரை பலவந்தமாக அடைத்து வைத்து பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை உட்பட ஐந்து குற்றச்சாட்டுகளின் கீழ், பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு தொடர்பான நீண்ட விசாரணையின் போது, பிரதிவாதிகள் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியதும் அவர்கள் ஒரு பெண்ணை பலவந்தமாக அடைத்து வைத்து வன்புணர்வுக்கு உட்படுத்தியமை தொடர்பில் முறைப்பாடு கிடைத்ததாக வழக்கு விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு குற்றம் சுமத்தப்பட்ட இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் கைது செய்த பின்னர், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு குறித்த நீண்ட விசாரணைக்கு பின்னர், குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், பிரதிவாதிகளுக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனையும் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.