மன்னார் நீதிமன்றம் முன் துப்பாக்கி சூடு – இருவர் உயிரிழப்பு

மன்னார் நீதிமன்றம் முன்பாக இன்று (வியாழக்கிழமை) பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மன்னார் உயிலங்குளம் பகுதியில், 2022 ஜூன் மாதம் 10ஆம் திகதி, மாட்டு வண்டி சவாரி தொடர்பாக ஏற்பட்ட தர்க்கத்தின் பின்னர் சகோதரர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணைகள் மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.
வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் வந்தவர்களை குறிவைத்து, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நால்வரிலும் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மற்ற இருவர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவத்தால் மன்னார் நீதிமன்ற சூழலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அந்த பகுதிக்கு பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.