சிறையில் இருந்து வெளிவந்தார் ஞானசாரர்
நான்கு வருட கால கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பிணையில் விடுதலைசெய்யப்பட்ட நிலையில், இன்று திங்கட்கிழமை சிறையிலிருந்து வெளியேறியுள்ளார்.
18 ஆம் திகதி பிணையில் விடுவிக்குமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கமைய கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே இன்று (22) காலை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கூரகல தொல்லியல் அமைவிடம் தொடர்பாக 2016 இல் கொழும்பில் நடத்தப்பட்ட ஊடக மாநாடொன்றில் இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தும் விதத்தில் கருத்துக்களை தெரிவித்தமைக்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நான்கு வருட கால கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் அவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், 50,000 ரூபாய் காசு பிணையிலும் தலா 500,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல நீதிமன்று உத்தரவிட்டுள்ளதுடன் வெளிநாட்டு பயணத் தடையையும் விதித்து மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.