வீட்டில் வைத்த பெற்றோல் தீப்பற்றியதில் கணவன் மனைவி பலி – யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் நேற்று அதிகாலை தீயினில் எரிந்த நிலையில் கணவன் மனைவியின் சடலங்கள் மீட்கப்பட்டுருந்தது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பல கோணங்களில் பொலிசார் முன்னெடுத்திருந்தனர்.
படுக்கை அறையில் வைக்கப்பட்டிருந்த பெற்றோலில் தீ பற்றியமையே இதற்கு காரணம் என தடயவியல் விசாரணை மற்றும் உடற்கூற்று பரிசோதனையின் பின் பொலிசாரினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சடலங்களாக நேற்று அதிகாலை கண்டறியப்பட்டனர்.
நேற்று அதிகாலை 4.15 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் வல்வெட்டித்துறை நெடியகாடு, ஏஜிஏ ஒழுங்கையைச் சேர்ந்த சரவணபவா ரஞ்சித்குமார் (வயது -30) அவரது மனைவி கிருசாந்தினி (வயது -26) என்ற இருவருமே சடலமாக மீட்கப்பட்டனர்.
தம்பதி உறங்கிய அறையில் தீ பற்றி எரிவதைக் கண்ட வீட்டிலிருந்தவர் அறையை உடைத்து உள்நுழைந்த போது இருவரும் தீயில் எரிந்து சடலமாகக் காணப்பட்டனர் என விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் குறித்து தடயவியல் விசாரணையில் அறையில் மின் ஒழுக்கு ஏற்பட்டமை மற்றும் பெற்றொல் பரவியமை குறித்து கண்டறியப்பட்டன. அத்தோடு உயிரிழந்த மனைவியின் கையில் போன் சார்ஜர் வயர் இருந்துள்ளமை மீட்கப்பட்டது.
இதனை அடுத்து இன்று மாலை மந்திகை ஆதார மருத்துவமனையில் இடம்பெற்ற உடற்கூற்று விசாரணையில் தீக்காயங்களுக்கு உள்ளாகியமையால் உயிரிழந்துள்ளனர் என அறிக்கையிடப்பட்டுள்ளது.
கணவர் சீன தயாரிப்பான போன் ஒன்றையே பயன்படுத்தி வந்துள்ளார். அந்த போன் வெப்பமாகி அல்லது சார்ஜர் வெப்பமாகி இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அத்தோடு படுக்கை அறையில் பெரிய கேனிலும் மற்றும் போத்தலிலும் பெற்றோல் சேமித்து வைக்கப்பட்டிருந்துள்ளது எனவும் தடயவியல் விசாரணையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.