இலங்கைக்கு ரயில் பெட்டிகளை விநியோகம் செய்த இந்தியா!

இலங்கையில் புகையிரத சேவை உட்கட்டமைப்பினை அபிவிருத்தி செய்வதற்கான இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் அடிப்படையில் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவைகள் (RITES) வரையறுக்கப்பட்டது, நிறுவனத்தினால் விநியோகம் செய்யப்பட்ட 20 ரயில் பெட்டிகள் அடங்கிய தொகுதி 2021 செப்டம்பர் 17ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் 318 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியின் கீழான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 160 ரயில் பெட்டிகளில் ஒரு பகுதியாகவே குறித்த ரயில் பெட்டிகள் தற்போது கொழும்பை வந்தடைந்துள்ளன. இந்த ஒப்பந்தம் 82.6 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கான 160 பெட்டிகளில் தற்போது வந்தடைந்துள்ள தொகுதியுடன் மொத்தமாக 60 ரயில் பெட்டிகள் இதுவரை இலங்கைக்கு வழங்கப்பட்டிருக்கும் அதேவேளை மேலும் 20 பெட்டிகள் விரைவில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படுவதற்காக தயார் நிலையில் உள்ளன. 2021 மார்ச் மாதம் முதலாவது தொகுதி ரயில் பெட்டிகள் இலங்கைக்கு வந்ததை தொடர்ந்து அவற்றை சேவையில் ஈடுபடுத்துவதற்கு முன்னதான பரீட்சார்த பயணங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை நினைவில் கொள்ளப்பட வேண்டியதாகும். இந்திய தயாரிப்பு ரயில் பெட்டிகள் இலங்கை புகையிரத திணைக்களத்தின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அதற்கமைவாக வடிவமைக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் 318 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியின் கீழ் RITES நிறுவனமானது இலங்கை ரயில்வே திணைக்களத்திற்கு குளிரூட்டப்பட்ட வசதிகளுடனான டீசல் ரயில்கள்(DMU) இரண்டை இலங்கைக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது. இதில் 13 பெட்டிகளடங்கிய முதலாவது குளிரூட்டப்பட்ட ரயில் இந்தியாவிலிருந்து அனுப்பப்படுவதற்கு தயார் நிலையில் உள்ளதுடன் குறித்த ரயிலை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான கப்பலை இலங்கை அரசாங்கம் பரிந்துரைக்கும்வரை காத்திருக்கின்றது. இந்த கடனுதவி திட்டத்தின் கீழ் மாஹோ முதல் ஓமந்தை வரையிலான (128 கி,மீ) ரயில் பாதை புனரமைப்பு, மாஹோ முதல் அனுராதபுரம் வரையிலான சமிக்கை வலையமைப்பு திட்டம், பொல்காவலை முதல் குருநாகல் வரையிலான இரட்டை ரயில் பாதை திட்டம் உள்ளிட்ட திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கு முன்னதாக மற்றொரு கடனுதவி திட்டத்தின் கீழ் டீசலில் இயங்கும் 06 ரயில்களும்- DMU (2019 இல் நிறைவடைந்த ஒப்பந்தம்), டீசலில் இயங்கும் 10 ரயில்களும் – Diesel Locomotives Railways(2020 ஜுனில் முடிவடைந்த ஒப்பந்தம்) RITES நிறுவனத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுவரையில் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அபிவிருத்தி உதவி திட்டங்கள் இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த உதவித் திட்டத்தின் கீழ் நன்கொடையாக வழங்கப்பட்ட திட்டங்கள் அதேபோல கடனுதவி அடிப்படையில் வழங்கப்பட்ட திட்டங்கள் ஆகியவை உள்ளடங்கியுள்ளன. இலங்கை மக்களாலும் அரசாங்கத்தினாலும் முன்னுரிமையளிக்கப்பட்ட உள்ள திட்டமாக கருதப்படும் ரயில் சேவை உட்கட்டமைப்பின் அபிவிருத்திக்கு விசேட கவனம் செலுத்தப்படுகிறது. இந்த அடிப்படையில் புகையிரதப் பாதைகளை புனரமைப்பு செய்தல் (268 கிமீ) சமிக்கை மற்றும் தொலைத்தொடர்பு பொறிமுறையை பொருத்துதல் (330 கிமீ) கரையோர புகையிரத மார்க்கங்களை தரம் உயர்த்துதல் (118கிமீ) ஆகிய திட்டங்கள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளன. ஏனைய பல்வேறு திட்டங்கள் அமுல்படுத்துவதற்கான பல தரப்பட்ட நிலைகளில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.